தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.7 கோடி மதிப்புள்ள 'கஞ்சா' பறிமுதல்- தப்பி ஓடியவரை தேடும் போலீஸ்

சென்னை விமான நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய, புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த போதை கடத்தல் பயணியை போலீசார் தேடி வருகின்றனர்.
தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.7 கோடி மதிப்புள்ள 'கஞ்சா' பறிமுதல்- தப்பி ஓடியவரை தேடும் போலீஸ்
Published on

ஆலந்தூர்,

தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து, தாய் ஏர்வேஸ் பயணிகள் விமானம், நேற்று அதிகாலை சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. இந்த விமானத்தில் வரும் ஒரு பயணியின் சூட்கேசில், போதைப்பொருள் இருப்பதாக தகவல் கிடைத்தது.

அதாவது, பாங்காக் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், போதைப்பொருள் இருப்பதை கண்டுபிடித்து, அந்த சூட்கேஸில், அடையாள குறி போட்டுள்ளதாகவும், சென்னை விமான நிலையத்தில் அந்த பயணியை பிடித்து விசாரணை நடத்தும் படியும், தாய்லாந்து நாட்டு சுங்கத்துறை அதிகாரிகள், இந்திய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

இதை அடுத்து டெல்லியில் உள்ள சுங்கத்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், நேற்று அதிகாலை, சென்னை விமான நிலையம், வருகை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதோடு குறிப்பிட்ட அந்த தாய் ஏர்வேஸ் விமான பயணிகளின் லக்கேஜ்கள் வரும் கன்வேயர் பெல்ட்டை தீவிரமாக கண்காணித்தனர்.

இதற்கிடையே அந்த கன்வேயர் பெல்ட்டில் வந்த லக்கேஜ்களை பயணிகள் எடுத்துச் சென்றனர். ஆனால் ஒரு சூட்கேசில், வெள்ளை கலர் சாக்பிஸ் மார்க் செய்யப்பட்டிருந்தது. அந்த சூட்கேஸை யாருமே எடுக்கவில்லை. அந்த விமானத்தில் வந்த அனைத்து பயணிகளும் தங்கள் உடைமைகளை எடுத்து சென்று விட்டனர். ஆனால் அந்த ஒரு சூட்கேஸ் மட்டும், கன்வேயர் பெல்ட்டில், கேட்பாரற்று யாரும் எடுக்காமல் கிடந்தது.

எனவே சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், அந்த சூட்கேஸை எடுத்து, திறந்து பார்த்தனர். அதற்குள் உயர்ரக கஞ்சாவான "ஹைட்ரோ போனிக்" ரக கஞ்சா இருந்தது. இது வெளிநாடுகளில் தரையில் வளராமல், தண்ணீரிலே மிதந்து கொண்டு வளரும் உயர் ரக கஞ்சா. அந்த சூட்கேசில், ஹைட்ரோ போனிக் என்ற பதப்படுத்தப்பட்ட உயர்ரக கஞ்சா, 14 கிலோ இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ. 7 கோடி.

இதை அடுத்து சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், அந்த உயர் ரக கஞ்சாவை பறிமுதல் செய்து, அந்த சூட்கேசில் இருந்த டேக் மூலம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த சூட்கேஸ் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பயணியுடையது என்று தெரிய வந்தது.

இதையடுத்து சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து, சென்னை விமான நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். அதோடு சென்னை விமான நிலைய போலீஸ், மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆகியோருக்கும் தகவல் கொடுத்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய, புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த போதை கடத்தல் பயணியை, கைது செய்ய தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com