

நாமக்கல்,
ஒடிசாவில் இருந்து நாமக்கல்லுக்கு கஞ்சா கடத்தப்படுவதாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரீஷ் அசோக்கிற்கு தகவல் கிடைத்தது.அவரது உத்தரவின் பேரில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியம் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் நாமக்கல் - சேந்தமங்கலம் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் உள்ள சிதம்பரப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே இந்த சோதனை நடத்தப்பட்டது. அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீஸார் பிடித்து விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.
இதனால் சந்தேகமடைந்த போலீஸார், அவரிடம் தங்களது பாணியில் கிடுக்கிப்பிடி விசாரணையை தொடங்கினர். இந்த விசாரணையில், அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சங்கர் பிகேரா (வயது 24) என்பதும், அங்கிருந்து நாமக்கல்லுக்கு கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, தலா 6 கிலோ எடையுள்ள 3 பொட்டலங்களில் மொத்தம் 18 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் மதிப்பு ரூ.9 லட்சத்திற்கு மேல் இருக்கும் என போலீசார் தெரிவித்த னர். இதையடுத்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.