

தமிழக அரசு பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்கி நகரங்களை தூய்மையாக மாற்றுவதற்காக பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்கும் விதமாக தூய்மை நகரங்களை நோக்கி மக்கள் இயக்கம் என்ற திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாங்காடு நகராட்சியில் பூங்காக்கள், நீர்நிலைகள், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணியும், திடக்கழிவுகளை பிரித்து சேகரிப்பது குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதி இன்றி வைக்கப்பட்ட பேனர்கள், விளம்பர பலகைகள் அப்புறப்படுத்தப்பட்டு அகற்றப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக நேற்று மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகளை நகராட்சி கமிஷனர் சுமா, நகர மன்ற தலைவர் சுமதிமுருகன், துணை தலைவர் ஜபருல்லா மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது.