நூல் விலை உயரும் என்ற அச்சத்தால் தீபாவளி பண்டிகைக்கான ஆடை தயாரிப்பு மும்முரம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஆடை உற்பத்தி அதிகரிக்கும்.
நூல் விலை உயரும் என்ற அச்சத்தால் தீபாவளி பண்டிகைக்கான ஆடை தயாரிப்பு மும்முரம்
Published on

திருப்பூர்,

தீபாவளி பண்டிகை

பனியன் தொழில் நகரான திருப்பூரில் வெளிநாட்டு ஆடை வர்த்தகத்துக்கு இணையாக உள்நாட்டு ஆடை உற்பத்தியும் நடந்து வருகிறது. பண்டிகை காலங்களில் உள்நாட்டு ஆடைகளுக்கான ஆர்டர்கள் வெளிமாநிலங்களில் இருந்து வருவது வழக்கம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழக்கமாக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஆடை உற்பத்தி அதிகரிக்கும்.

புதுடெல்லி, மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆடைகளை முன்கூட்டியே தயாரித்து அனுப்பிவைக்கப்படும். டி-சர்ட், உள்ளாடை, பெண்கள், சிறுவர்களுக்கான ஆடைகள் உள்ளிட்டவை நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. நூல் விலை உயர்வு காரணமாக ஆடைகளின் விலையையும் உயர்த்தும் கட்டாயத்தில் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.

உற்பத்தி தொடக்கம்

இதன்காரணமாக தீபாவளி பண்டிகை காலத்தில் ஆடைகளின் விலை உயரும் என்ற அச்சம் காரணமாக திருப்பூரில் உள்ள பல பனியன் உற்பத்தி நிறுவனங்கள் தீபாவளி விற்பனைக்கான ஆடை உற்பத்தியை முன்கூட்டியே தொடங்கியுள்ளன. குறிப்பாக கடந்த ஆண்டுகளில் அதிகம் விற்பனையான ஆடைகளின் அடிப்படையில் உள்ளாடை உற்பத்தி பணி வேகமெடுத்துள்ளன. திருப்பூரில் மாதந்தோறும் ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.2 ஆயிரத்து 800 கோடி வரை உள்நாட்டு ஆடை உற்பத்தி நடக்கிறது.

இதுகுறித்து பனியன் உற்பத்தியாளர்கள் கூறும்போது, 'நவம்பர் மாதம் 8-ந் தேதி தீபாவளி பண்டிகை என்பதால் செப்டம்பர் மாதம் கடைசியில் இருந்து ஆடைகளை அனுப்ப வேண்டியுள்ளது. தொழிலாளர் பற்றாக்குறை, நூல் விலை உயர்வு காரணமாக இப்போதே நூலை கொள்முதல் செய்து பனியன் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

பெரிய நிறுவனங்கள் இந்த பணி ஏற்கனவே தொடங்கிவிட்டன' என்றனர். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கான உள்நாட்டு ஆர்டர், திருப்பூர் உற்பத்தியாளர்களுக்கு கைகொடுத்தது. அதுபோல் இந்த ஆண்டும் புதிய ஆர்டர்கள் வருகை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் உற்பத்தியாளர்கள் ஆடை தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com