

வேலூர்,
வேலூர் மாவட்டம் அரியூர் பகுதியில் உள்ள பேக்கரியின் முதல் மாடியில், கேஸ் கசிவு காரணமாக இன்று எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. தீப்பற்றி எரியத் தொடங்கிய நிலையில், அங்கிருந்த பணியாளர்கள் தீயை அணைக்க முயன்றுள்ளனர்.
ஆனால், தீ மளமளவெனப் பரவியதால் அவர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். அனைவரும் சரியான நேரத்தில் பேக்கரியில் இருந்து வெளியேறியதால் இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வந்த தீயணைப்புத் துறையினர், அங்கிருந்த சிலிண்டர்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி தீயை முழுமையாக அணைத்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
இருப்பினும், பேக்கரி தயாரிப்புக் கூடத்தில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து அரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.