

திருவள்ளூர்,
அமோனியா வாயு கசிவு விபத்து ஏற்பட்ட ஆலையில் இருந்து 500 மீட்டர் சுற்றளவு வரையிலான பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆலையில் தேங்கி நிற்கும் 2 டன் அமோனியாவை வெளியேற்றும் பணி நாளை நடைபெற உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைப் பேர் கிராமத்தில் புனித பீட்டர் பால் கடல் உணவு பொருள்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் கடந்த 21-ந்தேதி அமோனியா வாயு கசிந்து விபத்து ஏற்பட்டது. இதில் 74 வடமாநில தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு 2 தனியார் மற்றும் 2 அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதில் சிகிச்சை பலனின்றி 17 பேர் உயிரிழந்த நிலையில், இன்று காலை மேலும் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமோனியா வாயு கசிவு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் சில தொழிலாளர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பிரேத பரிசோதனை முடிந்து அவர்களது சொந்த மாநிலத்துக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த சூழலில், அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட ஆலையில் இருந்து 500 மீட்டர் சுற்றளவு வரையிலான பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆலைக்கு 300 கி.மீ. சுற்றளவில் உள்ள மக்களை வெளியேற்றும் பணி இன்று தொடங்க உள்ளது.
இந்நிலையில், வாயு கசிவு ஏற்பட்ட ஆலையில் இன்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கவிதா நேரில் ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-
“ஆலையில் தேங்கி நிற்கும் 2 டன் அமோனியாவை வெளியேற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் இன்று நடைபெற்று வருகின்றன. அமோனியாவை வெளியேற்றுவதற்கு தேவையான கருவிகளும், நிபுணர் குழுக்களும், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் இன்று வரவழைக்கப்பட்டுள்ளனர். அமோனியாவை வெளியேற்றும் பணி நாளை காலை 8 மணிக்கு நடைபெற உள்ளது.
ஆலையை சுற்றி 300 மீட்டர் சுற்றளவில் இருக்கும் தொழிற்சாலைகளுக்கு நாளை விடுமுறை அளிக்க அறிவுறுத்தியுள்ளோம். இங்கு 300 மீட்டர் சுற்றளவிற்குள் குடியிருப்புகள் எதுவும் இல்லை. அதைத் தாண்டி இருக்கும் மக்கள் யாரும் பயப்பட வேண்டாம். அமோனியாவை கொண்டு செல்லும் வாகனங்களுக்காக நாளை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.