பள்ளியில் வாயு கசிவு விவகாரம்: மாணவர்கள் நடத்திய நாடகமா..?

விடுமுறைக்காக மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சென்னை திருவொற்றியூர் கிராமத்தெருவில் தனியாருக்கு சொந்தமான விக்டரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 1500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளி கட்டிடத்தின் 3-வது தளத்தில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். அதற்கு எதிர் தளத்தில் ஆய்வுக்கூடமும் உள்ளது.

கடந்த மாதம் 26-ந் தேதி இந்த ஆய்வுக்கூடத்தில் இருந்து ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் வகுப்பறையில் இருந்த 45 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம், மூச்சுத்திணறல், கண் எரிச்சல், தொண்டை எரிச்சல் ஏற்பட்டது. சில மாணவிகள் வாந்தி ஏற்பட்டு மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதனால் ஒரு வாரமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் தீபாவளி விடுமுறை முடிந்து கடந்த 4-ந்தேதி மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது. அப்போது திடீரென்று 9 மாணவிகள் மயக்கம் அடைந்தனர். மீண்டும் பள்ளியில் ரசாயன வாயு கசிவு ஏற்பட்டதால் மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. மயக்கம் ஏற்பட்ட மாணவிகள் அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அடுத்தடுத்து இரண்டுமுறை, வாயு கசிவால் மாணவிகள் பாதிக்கப்பட்டதால் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளி செயல்படாது என அரசு அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நவீன இயந்திரங்களை கொண்டு பள்ளி வளாகத்தில் காற்றின் தரத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். 5 நாட்கள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டது. ஆய்வின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டு மாசு கட்டுப்பாட்டுவாரியம் மற்றும் தனியார் பள்ளி இயக்குனரக அதிகாரிகள் ஆலோசனைக்கு பின் அந்த பள்ளி திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தனியார் பள்ளியில் வாயு கசிந்த விவகாரத்தில், மாணவர்கள் தான் இது போன்ற சம்பவத்தை அரங்கேற்றி இருப்பதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மர்ம பொருளை எடுத்து வந்து அதன் மூலம் மயக்கம் ஏற்படுவதற்கான பணிகளை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. விடுமுறைக்காக மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com