வாகனங்களுக்கான எரிவாயு தட்டுப்பாடு.. ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் ஆட்டோக்கள்

எரிவாயு நிரப்ப தினமும் 2 முதல் 3 மணி நேரம் வரை காத்திருப்பதாக ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வாகனங்களுக்கான எரிவாயு தட்டுப்பாடு.. ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் ஆட்டோக்கள்
Published on

சென்னை,

140 கோடி மக்கள்தொகையை கொண்ட இந்தியாவின் எல்.பி.ஜி. கியாஸ் தேவையில் 60 சதவீதம் இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. ஈரான் - இஸ்ரேல் போருக்கு முன்பு எல்.பி.ஜி. இறக்குமதியில் 90 சதவீதம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே பெறப்பட்டது. தற்போது, அந்த கடல் வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளதால், இறக்குமதி அளவு 55 சதவீதமாக குறைந்துள்ளது.

இதன் காரணமாக, இந்தியாவின் எரிவாயு இறக்குமதி மற்றும் விலை மீதான அழுத்தம் அதிகரித்து வருகிறது. பற்றாக்குறையை சமாளிக்க மாற்று வழிகளை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது. இந்த சூழலில் வாகனங்களுக்கான எல்.பி.ஜி., சி.என்.ஜி. எரிவாயுக்கள் கிடைக்காததால், ஓட்டுநா்கள் கடும் அவதியடைந்து வருகின்றனா்.

சென்னை நகரில் பல்லாயிரக்கணக்கான ஆட்டோக்கள், கால்டாக்சிகள் எல்.பி.ஜி. மற்றும் சி.என்.ஜி. எரிவாயுவை பயன்படுத்தி இயக்கப்படுகின்றன. அதேபோல், பல சிறு வணிக வாகனங்கள் மற்றும் பொது போக்குவரத்துக்கான பஸ்களும் தற்போது சி.என்.ஜி. எரிவாயுவில் இயக்கப்படுகின்றன. அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயா்வால் பலா் தங்கள் வாகனங்களின் கட்டமைப்பை எல்.பி.ஜி. மற்றும் சி.என்.ஜி. எரிவாயு மூலம் இயக்கும் வகையில் மாற்றி அமைத்திருந்தனா்.

வணிக ரீதியிலான சமையல் எரிவாயு உருளைக்கு ஏற்கெனவே தட்டுப்பாடு நிலவி வந்தாலும், வாகனங்களுக்கான எல்.பி.ஜி. எரிவாயு பல இடங்களில் கிடைத்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக வாகனங்களுக்கான எரிவாயு கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், வாடகை வாகன ஓட்டுநா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

எரிவாயு நிரப்பும் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டதால் ஆட்டோ ஓட்டுநர்கள் அவதி அடைந்துள்ளனர். மேலும் ஒரு சில இடங்களில் எரிவாயு நிரப்புவதற்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எரிவாயு நிரப்ப தினமும் 2 முதல் 3 மணி நேரம் வரை காத்திருப்பதாக ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், பெட்ரோல் பங்குகளில் கியாஸ் நிரப்ப நீண்ட வரிசையில் ஆட்டோக்கள் அணிவகுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com