மூச்சுத் திணறும் காசா... ஒவ்வொரு காட்சியும் நெஞ்சை உருக்குகிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை


மூச்சுத் திணறும் காசா... ஒவ்வொரு காட்சியும் நெஞ்சை உருக்குகிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை
x
தினத்தந்தி 18 Sept 2025 1:20 PM IST (Updated: 18 Sept 2025 1:32 PM IST)
t-max-icont-min-icon

காசாவில் நடைபெறும் ஒவ்வொரு காட்சியும் நெஞ்சை உருக்குவதாக உள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.

அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது. பணய கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

தற்போதைய நிலவரப்படி, ஹமாஸ் ஆயுதக்குழுவின் பிடியில் இன்னும் 50 பேர் பணய கைதிகளாக உள்ளனர். இதில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் ஆயுதக்குழுவினரை முழுமையாக ஒழிக்கும் நோக்கிலும் காசா முனையில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த இரு தினங்களாக காசா மீது தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அங்குள்ள பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் வெளியேறி வருகிறார்கள். வாகனங்களிலும், கால்நடையாகவும் மக்கள் வெளியேறிக் கொண்டிருக்கும் நிலையில், இஸ்ரேலின் படை துருப்புகள், காசாவுக்குள் தீவிரமாக ஊடுருவி முன்னேறிச் செல்லத் தொடங்கி உள்ளன.

சுமார் 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரில், காசாவில் பலியானவர்கள் எண்ணக்கை 65 ஆயிரத்தை தாண்டி உள்ளது. போர் மேலும் தீவிரமடைந்து வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் இந்த பயங்கரத்தை இப்போதே தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "காசா மூச்சுத் திணறுகிறது, உலகம் கண்டுகொள்ளாமல் இருக்கக் கூடாது! காசாவில் அரங்கேறி வரும் கொடுமைகளால் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு அதிர்ந்து போயிருக்கிறேன். அங்கிருந்து வெளிவரும் ஒவ்வொரு காட்சியும் நெஞ்சை உருக்குவதாக உள்ளது. பச்சிளம் குழந்தைகளின் அழுகுரல், பட்டினியில் தவிக்கும் சிறார்கள், மருத்துவமனைகள் மீது நடத்தப்படும் குண்டுவீச்சு, ஐ.நா. விசாரணை ஆணையமே அங்கு இனப்படுகொலை நடந்து வருவதாக அளித்துள்ள அறிக்கை ஆகிய அனைத்தும், எந்த மனிதரும் எப்போதும் அனுபவிக்கக் கூடாத துன்பங்களை அங்கு அனுபவித்து வருவதையே காட்டுகிறது.

அப்பாவி மனித உயிர்கள் இப்படி கொல்லப்படும்போது, அமைதியாக இருப்பது என்பது ஒரு தேர்வாக இருக்க முடியாது. நம் ஒவ்வொருவரின் மனசாட்சியும் விழிக்க வேண்டும். இந்தியா உறுதியான நிலைப்பாட்டோடு பேச வேண்டும், உலகம் மொத்தமும் ஒன்றிணைய வேண்டும். இந்தக் பயங்கரத்தை இப்போதே தடுத்து நிறுத்த நாம் அனைவரும் இணைந்து செயல்படவேண்டும். என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story