

சென்னை,
ஜெம் வீரமணி மீது 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக வீரமணி உள்பட அவருடன் தொடர்புடைய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரின்பேரில், கடந்த ஆகஸ்ட் மாதம் ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் சிலரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்டி) அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் ராயப்பேட்டை வீட்டில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக திடுக்கிடும் தகவல் வெளியானது. மேலும், அந்த சிறுமியின் உடல் அந்த வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் புதைக்கப்பட்டிருப்பதாக கைதான ஓட்டுநர் பாலா என்பவர் வாக்குமூலம் அளித்துளார்.
இந்த தகவலைத் தொடர்ந்து, சிறப்பு புலனாய்வுக் குழு மற்றும் போலீசார் நேற்று(சனிக்கிழமை) ராயப்பேட்டையில் உள்ள வீரமணியின் வீட்டிற்கு ஜே.சி.பி. உள்ளிட்ட கனரக இயந்திரங்களுடன் விரைந்தனர். வீட்டின் பின்புறம் உள்ள தோட்டப் பகுதியில் சுமார் 10 அடி ஆழத்திற்குப் பள்ளம் தோண்டி தீவிரமாக சோதனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், ஜெம் வீரமணியின் ஓட்டுநர் பாலா இன்று புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுவரை ஜெம் வீரமணி மீது 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக வீரமணி உள்பட அவருடன் தொடர்புடைய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒரு வழக்கில் மட்டும் கடந்த 11-ந்தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.