

சென்னை,
'ஜெம்' வீரமணி விவகாரத்தில் தலைமறைவான தொழில் அதிபர் பிரகாஷை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொழில் அதிபர் ஜெம் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், டிரைவர்கள் பாபு, பார்த்திபன், லாசர், உதவியாளர் கணேசன் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
'ஜெம்' வீரமணி மீது இதுவரை 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 8 போக்சோ வழக்குகள், ஒரு வழக்கு மட்டும் சிறுமியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு ஆகும்.
'ஜெம்' வீரமணி மீதான புகாரில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க போலீஸ் அதிகாரிகள் சிலருக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காக பெரம்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர் பிரகாஷ் என்பவர் மூலம் 'ஜெம்' வீரமணிக்கு சொந்தமான இடம் விற்பனை செய்யப்பட்டு அதன்மூலம் கிடைத்த பணத்தில் ரூ.70 கோடி முதல் ரூ.120 கோடி பலருக்கு கைமாறியதாக தகவல் வெளியானது.
இந்த தகவல் அடிப்படையில் சிறப்பு புலனாய்வு குழு விசா ரணை நடத்திய போது சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த நகை வியாபாரியிடம் தொழில் அதிபர் பிரகாஷ் ரூ.17 கோடிக்கு 13 கிலோ தங்க கட்டிகள் வாங்கியிருப்பது தெரியவந்தது.
தொழில் அதிபர் பிரகாஷை கைது செய்தால் தான் ரூ.120 கோடி பணம், தங்கக்கட்டிகள் யார், யாருக்கு பிரித்து கொடுக் கப்பட்டது? என்பது தெரியவரும் என்பதால் வெளிநாடு தப்பி சென்ற பிரகாஷை பிடிப்பதற்கு லுக் அவுட் மற்றும் ரெட் கார்னர் நோட்டீஸ் போலீசார் தரப்பில் அனுப்பப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் தொழில் அதிபர் பிரகாஷை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர். தொழில் அதிபர் பிரகாசின் இருப்பிடத்தை கண்டறிந்து கைது செய்வதற்காக அவரது தந்தையும், ரெயில்வே தொழிற்சங்க நிர்வாகியுமான கண்ணையாவிடம் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் 2 மணி நேரம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.