

சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
”பிரபல தொழிலதிபர் வீரமணி தொடர்புடைய வழக்கில் அடுத்தடுத்து வெடிக்கும் பூகம்பங்கள் – நேர்மையான, முழுமையான விசாரணைக்காக சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க தவெக அரசு முன்வர வேண்டும்!
பிரபல தொழிலதிபர் வீரமணி தொடர்புடைய பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவரும் தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
2025 ஆம் ஆண்டில்தான் இவ்வழக்கு தொடர்பாக புகார் பெறப்பட்டதாகவும், போதுமான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் வழக்கின் விசாரணையை முடித்துவிட்டதாகவும் கூறப்பட்ட நிலையில், தற்போது 2024 ஆம் ஆண்டிலேயே இது தொடர்பாக உரிய ஆதாரங்களுடன் புகார் அளித்தும் காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அரசியல் பிரமுகர் ஒருவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பெரும் பூகம்பத்தையே கிளப்பியுள்ளது.
உரிய ஆதாரங்கள் இருந்தும் விசாரணை நடத்தாதது ஏன்? தீவிர விசாரணை நடைபெறுவதற்கு முன்பாகவே வழக்கை முடித்துவைக்க முயன்றது ஏன்? காவல்துறையின் விசாரணையில் அரசியல் ரீதியிலான அழுத்தம் இருந்ததா? குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு இவ்வளவு அலட்சியமாக கையாளப்பட்டது எப்படி? என அடுத்தடுத்து எழும் கேள்விகளின் பின்னணியில் மிகப்பெரிய வலையமைப்பு இருக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, இவ்வழக்கில் காவல்துறையின் உயர் அதிகாரிகள் தொடங்கி, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களின் பெயர்களும் அடிபடுவதால், வழக்கின் விசாரணை நேர்மையான, வெளிப்படையான மற்றும் முழுமையான முறையில் நடைபெற ஏதுவாக சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.