

சென்னை,
ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனா கைதாக வாய்ப்பு எனத் தகவல் வெளியாகி உள்ளது.
சிறுமிகளை சீரழித்த 84 வயதான தொழில் அதிபர் ஜெம் வீரமணி 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்தது. அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி என்ற பெண் அவரது கணவர் மகேந்திர சிம்ஹனுடன் கைது செய்யப்பட்டார்.
வீரமணி சிறுமிகளுடன் சில்மிஷத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகளை வைத்திருந்தும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காத வீரமணியின் முன்னாள் உதவியாளர் கணேசன் மற்றும் சிறுமிகளை அழைத்து வந்த டிரைவர்கள் லாசர், பார்த்திபன் மற்றும் பாபு ஆகியோர் மீதும் அடுத்தடுத்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சமீபத்தில் ஜெம் வீரமணியிடம் 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் 200 கேள்விகளை எழுப்பி 14 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கில் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் இருந்து வருகிறது. எனவே அந்த வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வு குழுவினருக்கு விசாரணையின் முன்னேற்றம் குறித்து வாரந்தோறும் அதிகாரப்பூர்வமாக செய்திக்குறிப்பு வெளியிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் ஒவ்வொரு நகர்வுகள் குறித்தும் சிறப்புப் புலனாய்வு குழுவினர் வாரந்தோறும் செய்திக்குறிப்பு வெளியிடுகின்றனர்.
இந்தநிலையில்,சிங்கப்பூர் செல்ல சென்னை விமான நிலையம் வந்த ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனா வீரமணி தடுத்து உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டார்.
அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு விமானத்தில் ஏற முயன்ற போது கடைசி நேரத்தில் அர்ச்சனாவை குடியுரிமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பின்னர் வீரமணி வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் அர்ச்சனா ஒப்படைக்கப்பட்டார். இதனால் சிங்கப்பூர் செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் இன்று 12 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
இதையடுத்து சென்னை விமானநிலையத்தில் இருந்து அழைத்துச் சென்று அர்ச்சனாவிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். விசாரணையின் முடிவில் ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனா கைதாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.