

சென்னை,
ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் ஜெம் வீரமணி, சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை அவர் மீது 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், பல வழக்குகள் பதிவு செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே பதிவான ஒரு வழக்கில், ஜெம் வீரமணியின் கார் டிரைவர்கள் பாபு, பார்த்திபன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில், வீரமணி, பாபு, பார்த்திபன் ஆகியோருக்கு எதிரான 720 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், 40 சாட்சிகள் உள்ளனர்.
இந்த வழக்கில் சிறையில் உள்ள டிரைவர் பார்த்திபன், தனக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த அக்டோபர் 5-ந்தேதி போலீசார் கைது செய்தனர். எனக்கும் இந்த வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை. அதனால், ஜாமீன் வழங்கவேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு ஐகோர்ட்டு நீதிபதி என்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுவிற்கு போலீஸ் தரப்பில் பதில் அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டார். விசாரணையை வருகிற 24-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.