

சென்னை,
ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணியின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அப்பாவி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை மூலம் சீரழித்த குற்றத்துக்காக வீரமணி போக்சோ சட்டத்தில் கடந்த ஆக.29ஆம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வீரமணிக்கு துணை போனதாக சாந்தி என்ற பெண்ணும், அவரது கணவர் மகேந்திர சிம்கன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2003-ம் ஆண்டில் இருந்து சுமார் 23 ஆண்டுகள் வீரமணியின் பாலியல் விளையாட்டுகள் தொடர்ந்து நடந்துள்ளது. வீரமணி தொடர்பான ஆபாச வீடி யோக்கள் அவரது உதவியாளராக இருந்த கணேசன் என்பவரின் செல்போனில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து அவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும், இந்த வழக்கில் பெரம்பூரை சேர்ந்த பிரகாஷ் என்பவரையும், வீரமணியின் தம்பி ஒருவரையும் போலீசார் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரம்பூர் பிரகாஷ் வெளிநாட்டில் இருக்கிறார். அவர் தொடர்பாக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கி அனைத்து விமான நிலையங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அவருடைய வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந்தேதி அடையாளம் தெரியாத நபர் வழங்கிய பென் டிரைவ் மற்றும் கடிதத்தை ஆதாரமாக வைத்து குழந்தைகள் நல ஆர்வலர் அளித்த புகார் மனு அப்போதைய சென்னை மத்திய குற்றப் பிரிவின் கூடுதல் கமிஷனராக இருந்த கண்ணனுக்கு அனுப்பப்பட்டது.
இந்த புகார் மீது அதே ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் சென்னை விபசார தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.ஆனால், 'வீடியோவில் உள்ள நபரை பற்றிய தகவல்களை கண்டறிய முடியவில்லை' எனக் கூறி கடந்த பிப்ரவரி 26-ந்தேதி போக்சோ சிறப்பு கோர்ட்டில் விபசார தடுப்புப்பிரிவு போலீசார் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தனர்.
அந்த அறிக்கையில், 'குறிப்பிட்ட தோற்றத்தில் உள்ள நபரை பற்றி ரகசியமாக புலனாய்வு செய்து அவரை கண்டுபிடிப்பதற்கான அனைத்து முயற்சி களும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், தகவல்கள் எதுவும் கண்டறிய முடியவில்லை' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை ஏற்க மறுத்த சென்னை போக்சோ சிறப்பு கோர்ட்டு, 'வீடியோ இருந்தும் ஏன் கண்டறிய முடியவில்லை?' என கேள்வியெழுப்பி, வழக்கை மறுவிசாரணை செய்யுமாறு கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது. இந்தநிலையில்தான், மீண்டும் இந்த வழக்கு தூசி தட்டி எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. இந்த விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.
இந்த வழக்கு சம்பந்தமாக ஒவ்வொரு நாளும் வெளியாகி வரும் அதிர்ச்சிகரமான தகவல்கள் மனசாட்சி உள்ள ஒவ்வொருவரையும் உலுக்கி வருகிறது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் வழக்கில் தொடர்புடைய பலரை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்துள்ளனர். இந்த விசாரணை வளையத்துக்குள் அரசியல் கட்சி பிரமுகர்கள், போலீஸ் அதிகாரிகளும் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில், சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் ஜெம் வீரமணி, புழல் சிறையில் இருந்து காணொலி மூலம் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் ஜெம் வீரமணியின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 9ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.