நாளை காலை விசாரணைக்கு ஆஜராக வேண்டும்: ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனாவுக்கு சம்மன்

ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனாவிடம் இந்த வழக்கு தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
நாளை காலை விசாரணைக்கு ஆஜராக வேண்டும்: ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனாவுக்கு சம்மன்
Published on: 

சென்னை,

ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனா, நாளை காலை விசாரணைக்கு ஆஜராகுமாறு சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) சம்மன் அனுப்பி உள்ளது.

சிறுமிகள் பாலியல் வழக்கு

தமிழகத்தை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கிய சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில், பிரபல தொழில் அதிபர் ஜெம் கிரானைட் வீரமணி கைது செய்யப்பட்டார். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் சாந்தி. மகேந்திர சிம்மன், வீரமணியின் உதவியாளர் கணேசன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீரமணிக்கு எதிராக இதுவரை 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து வருகின்றனர்.

ஜெம் வீரமணி மகள்

இந்த நிலையில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு பகல் 2.20 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட இருந்தது. அந்த விமானத்தில் செல்ல இருந்த பயணிகள், குடியுரிமை, சுங்கம் மற்றும் பாதுகாப்புச் சோதனைகளை முடித்துவிட்டு காத்திருந்தனர்.

அப்போது, விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளிடம் சிறப்பு புலனாய்வுப்பிரிவு போலீசார் தொடர்புகொண்டு, அந்த விமானத்தில் ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனா சிங்கப்பூர் செல்கிறாரா? என்று கேட்டனர். இதற்கு குடியுரிமை அதிகாரிகள். அர்ச்சனா மீது எந்தவிதமான 'லுக் அவுட்' நோட்டீசும் இல்லாததால் அவர் சிங்கப்பூர் செல்ல அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

கீழே இறக்கப்பட்டார்

உடனே, அவரது விமானப் பயணத்தை ரத்து செய்து, அவரை விமானத்தில் இருந்து இறக்கி விடுமாறு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து. அர்ச்சனாவை அதிகாரிகள் விமானத்தில் இருந்து இறக்கிவிட்டனர். அவரது உடைமைகளும் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டன.

பின்னர், சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார், அர்ச்சனாவை விசாரணைக்காக சென்னையில் உள்ள அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனால், சுமார் 12 நிமிடங்கள் தாமதமாக, பகல் 2.32 மணிக்கு விமானம் புறப்பட்டுச் சென்றது. அர்ச்சனா மீது வழக்குகள் எதுவும் இல்லை. எனினும் அவரிடம் இந்த வழக்கு தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

திடீர் உடல்நலக்குறைவு

சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்துக்கு அர்ச்சனா வீரமணி மதியம் 3.30 மணியளவில் அழைத்து வரப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. அப்போது அவருக்கு திடீர் உடல்நலக்கு றைவு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆம்புலன்ஸ் மூலம் டாக்டர்களை வரவழைத்தனர். அவர்கள் சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்தில் வைத்து அர்ச்சனா வீரமணியின் உடல்நிலையை பரிசோதித்தனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

சம்மன்

இந்நிலையில் ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணியின் மகள் அர்ச்சனாவுக்கு சிறப்பு புலனாய்வுக் குழு சம்மன் அனுப்பி உள்ளது. நாளை காலை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அர்ச்சனாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நேற்று விசாரணையின்போது அர்ச்சனாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com