விநாயகர் சிலை ஊர்வலம் குறித்து இந்து அமைப்புகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பாக இந்து அமைப்புகளுடன் சென்னை தலைமைச்செயலகத்தில், தலைமைச்செயலாளர் கே.சண்முகம் நேற்று ஆலோசனை நடத்தினார்.
விநாயகர் சிலை ஊர்வலம் குறித்து இந்து அமைப்புகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை
Published on

சென்னை,

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 22-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின்போது இந்து அமைப்புகள் சார்பில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் பொது இடங்களில் வைத்து பூஜிக்கப்படும். பின்னர் இந்த சிலைகள் போலீசார் அனுமதிக்கும் நாளில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவலால் ஊரடங்கு அமலில் இருப்பதால், விநாயகர் ஊர்வலம் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று தமிழக இந்து பரிவார் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்தநிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில், தலைமைச்செயலாளர் கே.சண்முகம், விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரன், சென்னை மாநகர தலைவர் ஏ.டி.இளங்கோவன், தமிழக இந்து பரிவார் தலைவர் எம்.வசந்தகுமார்ஜி, சிவசேனா(தமிழ்நாடு) தலைவர் ராதாகிருஷ்ணன், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் செந்தில் உள்பட இந்து அமைப்பு நிர்வாகிகள், பிரதிநிதிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். மதியம் 3 மணிக்கு தொடங்கிய கூட்டம் மாலை 4 மணியளவில் நிறைவடைந்தது.

இதில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. ஜெ.கே.திரிபாதி, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், வருவாய்த்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் தலைமை செயலாளர் விக்ரம் கபூர், வருவாய்த்துறை கமிஷனர் க.பனீந்திர ரெட்டி, சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உள்பட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் இந்து அமைப்பு நிர்வாகிகள் பேசுகையில், கொரோனா பரவல் இருந்தாலும் ஆன்மிகமும் அவசியம். எனவே கடந்த ஆண்டுகளை போலவே விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதிக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு என்ன வழிமுறைகள், நிபந்தனைகள் விதித்தாலும் ஏற்க தயாராக உள்ளோம். என்றனர்.

கூட்டத்தில் தலைமை செயலாளர் கே.சண்முகம், தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு, பரவல் நிலை குறித்து எடுத்துக்கூறினார். இதைத்தொடர்ந்து அவர், உங்களுடைய (இந்து அமைப்பு) கோரிக்கைகள் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். முதல்-அமைச்சரின் கருத்தை கேட்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com