'கெட்அவுட் ரவி' இந்திய அளவில் டிரெண்ட் ஆன ஹேஷ்டேக்

இந்திய அளவில் ‘கெட்அவுட் ரவி’ என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது.
'கெட்அவுட் ரவி' இந்திய அளவில் டிரெண்ட் ஆன ஹேஷ்டேக்
Published on

சென்னை,

2023-ம் ஆண்டுக்கான முதல் தமிழ்நாடு சட்டசபை கூட்டம் நேற்று தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது, தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையில் உள்ள 65வது பத்தியை கவர்னர் ஆர்.என். ரவி வாசிக்க மறுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பத்தியில், சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கியவளர்ச்சி சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல், பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், திராவிட மாடல் ஆட்சி, தமிழ்நாடு அமைதிப் பூங்கா' என்ற வார்த்தையும் கவர்னர் வாசிக்க மறுத்தார்.

மேலும், மாநில அரசு தயாரித்து கொடுத்த உரையை தாண்டி கவர்னர் மேலும் சில கருத்துக்களை கூறினார். இதனால், அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. முன்னதாக, தமிழ்நாட்டை தமிழ்நாடு என்று அழைப்பதற்கு பதில் தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்று கவர்னர் கடந்த சில நாட்களுக்கு முன் கூறி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மாநில அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல் தனது கருத்துக்களை கூறியதற்காக அவையில் கவர்னர் ஆர்.என்.ரவிக்க்கு எதிராக திமுக கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கோஷங்களை எழுப்பினர்.

கவர்னர் உரைக்கு பின் அவையில் பேசிய முதல்-அமைச்சர் முக ஸ்டாலின், அரசின் உரையை கவர்னர் முழுமையாக படிக்காதது வருத்தம் அளிப்பதாகவும், அவர் பேசியது அரசின் கொள்கைக்கு மாறானது என்றும் கூறினார். மேலும், அரசு தயாரித்து கொடுத்து அச்சிடப்பட்ட உரையை கவர்னர் முறையாக படிக்காதது விதியை மீறிய செயல் ஆகும்.

எனவே, அச்சிடப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட ஆங்கில உரை மற்றும் பேரவை தலைவரால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியன மட்டும் அவைக்குறிப்பில் ஏற வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். அதேபோல் அச்சிடப்பட்டதற்கு மாறாக கவர்னர் படித்த பகுதிகள் அவைக்குறிப்பில் இடம்பெறாது என்ற தீர்மானத்தையும் முன்மொழிந்தார்.

இந்த தீர்மானங்களை பேரவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்துகொண்டிருந்தபோது, கவர்னர் அவையில் இருந்து வெளியேறினார். அதன்பின்னர் முதல்-அமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் பேரவையால் நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவையில் கூட்டம் நிறைவடையும் முன்பே, தேசியகீதம் இசைக்கும் முன்பே கவர்னர் ஆர்.என். ரவி அவையில் இருந்து வெளியே சம்பவத்திற்கு பல்வேறு தரப்பும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்ற கருத்து, சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய சம்பவத்தை தொடர்ந்து கவர்னர் ஆர்.என். ரவி வெளியேறவேண்டும் என்று பலர் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேற வேண்டும் என்று கருத்து தொடர்பாக 'கெட் அவுட் ரவி' (GetOutRavi) என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. தமிழ்நாடு அரசியலில் கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள், அவரின் கருத்துக்கள் சமீப நாட்களாக கடுமையான விமர்சனத்தை சந்தித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com