கஜா புயல்: நிவாரணம் கோரி திருவாரூரில் சாலை மறியல்; 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கிட கோரி திருவாரூர் அருகே சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
கஜா புயல்: நிவாரணம் கோரி திருவாரூரில் சாலை மறியல்; 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
Published on

திருவாரூர்,

தமிழகத்தில் கடந்த வருடம் நவம்பர் 16ந்தேதி கஜா புயல் கடலோர மாவட்டங்களை புரட்டி போட்டது. இதில் திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை மற்றும் நாகை உள்ளிட்டவை அதிக பாதிப்பிற்கு உள்ளாகின.

கஜா புயலின் தாக்குதலால் பல லட்சம் தென்னை, பலா மற்றும் பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்தன. வாழை, கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களும் நாசமாகின. லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. மேலும் மின்மாற்றிகள், துணை மின் நிலையங்களிலும் பெரும் சேதம் ஏற்பட்டது.

ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து முகாம்களில் தங்கினர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி போனது. அதன்பின் நிவாரண பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்தன. அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவை உடனடியாக வழங்கப்பட்டன. எனினும் மக்கள் புயல் பாதிப்பில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கிட கோரி திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் ஊராட்சியில் இன்று சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதனை அடுத்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியல் போராட்டத்தால், திருவாரூரில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com