

புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் டெல்லியில் நேற்று, அவரது இல்லத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலம் பெற கடவுளை பிரார்த்திக்கிறோம். மூத்த அரசியல் தலைவரான அவர், அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவராலும் மதிக்கப்படுகிறவர். சோனியாகாந்தி, ராகுல்காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட அனைத்து தலைவர்களுக்கும் மிகவும் நெருக்கமானவர். எங்களுடன் கூட்டணியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நட்புடன் இருந்தவர்.
அவரது உடல்நலத்தை விசாரிக்க நானும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கும் இன்று (சனிக்கிழமை) காலையில் சென்னைக்கு புறப்படுகிறோம். அவர் விரைவில் குணம் அடைவார் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.