

ராமேசுவரம்,
ராமநாதபுரம் மாவட்டத்துடன் ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போதுள்ள பாம்பன் ரெயில் பாலம் 100 ஆண்டுகளை கடந்து பழமையான பாலம் ஆகிவிட்டதால் அந்த பாலத்தின் அருகிலேயே சுமார் 50 மீட்டர் தூரத்தில் வடக்கு கடல் பகுதியில் புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் புதிய ரெயில் பாலம் பணிகளுக்காக கேரள மாநிலம் விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து 54 மீட்டர் நீளம், 20 மீட்டர் அகலம், சுமார் 1,200 டன் எடை கொண்ட ராட்சத மிதவையை இழுவை கப்பல் ஒன்று இழுத்தபடி நேற்று முன்தினம் பாம்பன் வந்தது. தென் கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
தூக்குப்பாலத்தில் மோதின
இந்த நிலையில் அதனை மறுபுறம் கொண்டு செல்வதற்காக பாம்பன் ரெயில் பாலத்தின் மத்தியில் உள்ள தூக்குப்பாலம் நேற்று மதியம் திறக்கப்பட்டது. தொடர்ந்து தென் கடல் பகுதியில் நிறுத்தி இருந்த ராட்சத மிதவையை இழுவைக் கப்பல் இழுத்தபடி தூக்குப்பாலத்தை கடப்பதற்காக மெதுவாக வந்தது.
தூக்குப்பாலம் அருகே வந்தபோது, நங்கூரமிட்டு நிறுத்திய ஒரு படகு மீது மோதியபடி மிதவை வந்தது. தொடர்ந்து தூக்குப்பாலத்தை கடந்த போது அதன் தூண் மீது வேகமாக மோதியபடி சென்றது.
உடைந்து சேதம்
தொடர்ந்து மிதவைக்கு பின்பக்கத்தில் வந்த பாம்பனை சேர்ந்த 2 மீன்பிடி விசைப்படகில் ஒரு படகும் தூணில் மோதியது. இதில் மீன்பிடி படகின் பின்பகுதி உடைந்து சேதமடைந்தது. பாம்பன் பாலத்தில் ராட்சத மிதவை மற்றும் மீன்பிடி படகு அடுத்தடுத்து மோதியது பரபரப்பை ஏற்படுத்தியது.
மிதவை கப்பல் மற்றும் மீன்பிடி படகு அடுத்தடுத்து தூக்குப்பாலத்தில் மோதியதால் பாலத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து ரெயில்வே அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.