பெண் அடித்துக் கொலை

உவரி அருகே குடும்ப தகராறில் மனைவியை அடித்துக்கொன்ற மீனவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெண் அடித்துக் கொலை
Published on

நெல்லை மாவட்டம் உவரி அருகே கூடுதாழையைச் சேர்ந்தவர் அகிலன் (வயது 38). மீனவர். இவருடைய மனைவி ரேஷ்மி (31). தையல் தொழிலாளி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் ரேஷ்மி கணவரிடம் கோபித்துக்கொண்டு குழந்தைகளுடன் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் உள்ள பெற்றோரின் வீட்டுக்கு சென்றார்.

இதையடுத்து ரேஷ்மியை அவரது தாயார் சமாதானப்படுத்தி நேற்று மதியம் அவரை குழந்தைகளுடன் கூடுதாழையில் உள்ள கணவரின் வீட்டுக்கு அழைத்து வந்தார். பின்னர் ரேஷ்மியின் தாயார் மணப்பாட்டுக்கு திரும்பி சென்று விட்டார்.

தொடர்ந்து மாலையில் அகிலனுக்கும், ரேஷ்மிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த அகிலன் மனைவி என்றும் பாராமல் தையல் எந்திரத்தால் ரேஷ்மியின் தலையில் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அகிலன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்..

இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து, உவரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே இன்ஸ்பெக்டர் சகாயசாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த ரேஷ்மியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அகிலனை வலைவீசி தேடி வருகின்றனர். உவரி அருகே குடும்ப தகராறில் மனைவியை கணவரே அடித்துக் கொலை செய்த பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com