பெண் குழந்தைகளை தைரியம் உள்ளவர்களாக வளர்க்க வேண்டும்: கனிமொழி

பெண் குழந்தைகளை தன்னம்பிக்கை, தைரியம் உள்ளவர்களாக வளர்க்க வேண்டும் என்று பெற்றோருக்கு கனிமொழி எம்.பி. அறிவுறுத்தினார்.
பெண் குழந்தைகளை தைரியம் உள்ளவர்களாக வளர்க்க வேண்டும்: கனிமொழி
Published on

குழந்தைகள் பாதுகாப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பயிற்சி தூத்துக்குடி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் சமூகநலத்துறை சார்பில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சமூகபாதுகாப்புத்துறை இயக்குனர் வளர்மதி, ஜி.வி.மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., தமிழ்நாடு, கேரளா யுனிசெப் குழந்தை பாதுகாப்பு நிபுணர் குமரேசன், யங் இந்தியன்ஸ் தலைவர் பொன்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சமூகநல அலுவலர் தனலட்சுமி வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பேசினார். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

உரிமை

குழந்தைகளை பாராட்டுவதும், போற்றுவதும் நாம்தான். அதே நேரத்தில் குழந்தைகளை பாதுகாப்பு இல்லாத சூழலில் வளர்ப்பதும் நாம்தான். நாம் குழந்தைகளின் உரிமை பற்றி சிந்திப்பதே கிடையாது. அவர்களுக்கு என்று ஒரு உணர்வு உள்ளது, வாழ்க்கை உள்ளது. அடிக்காமல் வளர்த்த பிள்ளை உருப்படாது என்ற நிலையிலேயே வளர்ந்து உள்ளோம். குழந்தைகளை அடித்து துன்புறுத்த யாருக்கும் உரிமை கிடையாது. குழந்தைகளுக்கு எது சரி, எது தவறு என்று எடுத்துக் கூற வேண்டும். பெண் குழந்தைகளை பெற்றால், திருமணம் செய்து கொடுத்து விட்டால் கடமை முடிந்து விட்டதாக பெற்றோர் நினைக்கின்றனர். அது உண்மையல்ல. அந்த பெண் குழந்தை கண்ணீர் விட்டால் காலம் முழுவதும் பெற்றோருக்கு வலிக்கும்.

கடமை

ஆகையால், பெண் குழந்தைகளை தன்னம்பிக்கை, தைரியம் உள்ள பெண்ணாக வளர்ப்பதுதான் பெற்றோரின் கடமை. மத்திய அரசு பெண் குழந்தைகளின் திருமண வயதை 21 ஆக உயர்த்த இருப்பதாக கூறப்படுகிறது. அதனை கொண்டு வர வேண்டும். அப்போது தான் பெண்கள் மேல்படிப்பு படிப்பது தொடர்பாக யோசிப்பதற்கான அவகாசம் கிடைக்கும். குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். குழந்தை திருமணம் நடக்காமல் இருக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தை திருமணம் குறித்து தகவல் தெரிந்தால், ஓட்டு போய்விடுமோ என்று யோசிக்காமல், குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து குழந்தை திருமணத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறுகளே நடக்காமல் பாதுகாப்பான சூழலை குழந்தைகளுக்கு உருவாக்கி தர வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தை மற்ற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமான மாவட்டமாக மாற்ற வேண்டும். குழந்தைகளை சிலர் குற்ற செயல்களில் ஈடுபடுத்துகின்றனர். இந்த நிலையை மாற்ற வேண்டும். தமிழ்நாடு, குழந்தைகளுக்கு பாதுகாப்பு உள்ள மாநிலமாக, உலகுக்கே முன்மாதிரியாக திகழ வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சமூகநலத்துறை திட்டங்கள், ஊட்டச்சத்து உணவு குறித்த கண்காட்சியை கனிமொழி எம்.பி. திறந்து வைத்து பார்வையிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com