கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த விவகாரம்: பள்ளி முதல்வர் உட்பட 3 பேர் கைது

விழுப்புரத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த விவகாரம்: பள்ளி முதல்வர் உட்பட 3 பேர் கைது
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்த தம்பதி பழனிவேல்-சிவசங்கரி. இவர்களுக்கு லியா லட்சுமி (4 வயது) என்ற குழந்தை இருந்தது. மேலும் 2 மாத ஆண் குழந்தையும் உள்ளது. லியா லட்சுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தார்.

இந்த நிலையில், குழந்தை லியா லட்சுமி நேற்று பள்ளியில் மதிய உணவு இடைவேளையின்போது பள்ளி வளாகத்திற்குள் உள்ள கழிவுநீர் தொட்டி அருகே விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது கழிவுநீர் தொட்டியின் மீது போடப்பட்டிருந்த இரும்பு தகடு துருப்பிடித்து இருந்த நிலையில், மூடி உடைந்து கழிவுநீர் தொட்டிக்குள் குழந்தை விழுந்துள்ளது.

சிறுமி கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்ததை அறிந்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே குழந்தையின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சிறுமி உயிரிழந்த விவகாரம் தொர்பாக அறிக்கை சமர்ப்பிக்க பள்ளி நிர்வாகத்திற்கு தனியார் பள்ளிகள் இயக்குநர் முத்து பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதன்படி பள்ளி தாளாளர் எமில்டா, பள்ளி முதல்வர் டோம்னிக் மேரி மற்றும் வகுப்பாசிரியர் ஏஞ்சல் ஆகியோரை நேற்று நள்ளிரவில் போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com