விஷம் குடித்துவிட்டு பள்ளிக்கு சென்ற மாணவி - வகுப்பறையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வேலூர்,

வேலூரில் விஷம் குடித்துவிட்டு பள்ளிக்கு சென்ற பிளஸ்-1 மாணவி, வகுப்பறையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விஷம் குடித்தார்

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள மேலரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் நேற்று காலை 5 மணியளவில் வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து குடித்துள்ளார். பின்னர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார். 10.30 மணியளவில் பள்ளி வகுப்பறையில் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதி

இதனை பார்த்த சக மாணவிகள் கத்தி கூச்சலிட்டுள்ளனர். உடனடியாக அவரை ஆசிரியர்கள் மீட்டு அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவி விஷம் குடித்துள்ளதாக தெரிவித்தனர். இதனையடுத்து உடனடியாக மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் மாணவியின் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து அவருடைய பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி ஒருவர் விஷம் குடித்து விட்டு பள்ளியில் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com