

சென்னை,
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
கோவை மாவட்டம், சூலூர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்ற நிலையில், வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் தேடியபோது, அந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
இந்த கொடூரமான மற்றும் மனிதநேயமற்ற செயலில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் மீது தமிழக அரசு உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குழந்தையை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தேமுதிக சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். குழந்தையின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் அரசு இரும்புக்கரம் கொண்டு சட்டம் மற்றும் ஒழுங்கை காக்க வேண்டும். யாருக்கோ வருவதில்லை; யாருக்கும் வருவது என்பதை கருத்தில் கொண்டு உட்சபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என தேமுதிக சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.