சூலூரில் சிறுமி பலாத்காரம் செய்து கொலை: 21 நாட்களில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்

சூலூரில் சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் 819 பக்க குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சூலூரில் சிறுமி பலாத்காரம் செய்து கொலை: 21 நாட்களில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்
Published on

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த மாதம் 21-ந்தேதி கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியில் வசிக்கும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்திக் (33) மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மோகன்ராஜ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் 30 நாட்களுக்குள் கோவை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். இதற்காக கைது செய்யப்பட்ட 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்த சூலூர் போலீசார், கோவை போக்சோ கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். போலீசாரின் மனுவை விசாரித்த நீதிபதி பகவதியம்மாள், குற்றவாளிகள் 2 பேரையும் 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

விசாரணை

அப்போது சம்பவம் குறித்து கார்த்திக் நடித்துக் காட்டினார். அதேபோன்று அவருக்கு உடந்தையாக இருந்த மோகன்ராஜும் சம்பவ இடத்தில் நடித்துக் காட்டியுள்ளார். அவற்றை போலீசார் வீடியோவாக பதிவு செய்தனர்.3 நாட்கள் காவல் விசாரணை முடிந்ததும், அவர்கள் 2 பேரும் மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின்னர் கடந்த சில நாட்களாக போலீசார் குற்றப்பத்திரிகையை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

குற்றப்பத்திரிகை தாக்கல்

இந்த நிலையில், சிறுமி கொலை வழக்கில் இன்று சூலூர் போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். கோவை கோர்ட்டு வளாகத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் 819 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர். இந்த குற்றப்பத்திரிகை ஆன்லைன் மூலமாக இ-பைலிங் முறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் நடந்த 21 நாட்களுக்குள் போலீசார் விசாரணையை முடித்து, கோர்ட்டில் முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com