இளம்பெண் தற்கொலை வழக்கு.. இறப்பதற்கு முன்பு எழுதிய கடிதத்தில் பரபரப்பு தகவல்

கருங்கல் அருகே இளம்பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இளம்பெண் தற்கொலை வழக்கு.. இறப்பதற்கு முன்பு எழுதிய கடிதத்தில் பரபரப்பு தகவல்
Published on

குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள திக்கணங்கோடு கிழக்கு தாறாவிளையை சேர்ந்தவர் ராபின்சன். இவருடைய மகள் ஜெமலா மேரி (வயது 26), பி.எஸ்சி. நர்சிங் முடித்துள்ளார். இவரும், இனயம் சின்னத்துறையை சேர்ந்த மரிய டேவிட் மகன் நிதின் ராஜ் (26) என்பவரும் காதலித்து வந்தனர். நிதின்ராஜ் பி.இ. படித்துள்ளார்.

இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் முதலில் ஜெமலா மேரியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால், காதல் ஜோடி திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தனர். இதையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி திருமணம் நடந்தது.

இதனை தொடர்ந்து பெண் வீட்டார் சார்பில் மேல்மிடாலம் கூண்டுவாஞ்சேரியில் புதிய வீடு கட்டி கொடுத்தனர். அந்த வீட்டில் ஜெமலா மேரியும், நிதின் ராஜும் குடும்பம் நடத்தி வந்தனர். நிதின் ராஜ் பி.இ. படித்திருந்த நிலையில் சரியான வேலை இல்லாமல் இருந்தார். மேலும் வெளிநாடு செல்வதாக கூறி வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே சிறு சிறு குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மதியம் 12 மணிக்கு ஜெமலா மேரி பெற்றோரை தொடர்பு கொண்டு, உங்களுடைய மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், அவருடைய உடல் கருங்கலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நிதின்ராஜின் உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். உடனே ஜெமலா மேரியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் விரைந்தனர். அங்கு அவருடைய உடலை பார்த்து கதறி அழுதனர்.

பிறகு உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இதனால் பிணவறை முன் ஜெமலா மேரி தாயார், குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் திரண்டிருந்தனர். உறவினர்கள் கதறி அழுதபடி திடீரென உடலை வாங்க மாட்டோம் என்று கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து பகல் 1 மணியளவில் உடலை வாங்கிக்கொண்டு உறவினர்கள் சென்றனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே ஜெமலா மேரியின் வீட்டை போலீசார் சோதனையிட்ட போது, அவர் இறப்பதற்கு முன்பு எழுதி வைத்த கடிதம் சிக்கியது. அதில், நான் சுய நினைவுடன் எழுதுவது. என் சாவிற்கு யாரும் காரணம் இல்லை. என் கணவனோ அல்லது அவரின் குடும்பமோ காரணம் அல்ல. நான் சுயமாக முடிவெடுத்தது.

என்னை யாரும் தற்கொலைக்கு தூண்டவில்லை என எழுதப்பட்டிருந்தது. இது மட்டுமின்றி அவரது உள்ளாடையில் எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும் எழுதப்பட்டிருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com