கடையம் அருகே உள்ள ரவணசமுத்திரத்தில் மாயமான சிறுமி ஆற்றில் சடலமாக மீட்பு

ராமநதி ஆற்றில் சிறுமியின் உடல் சடலமாக மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கடையம் அருகே உள்ள ரவணசமுத்திரத்தில் மாயமான சிறுமி ஆற்றில் சடலமாக மீட்பு
அஹமது ஹாஜிரா
Published on: 

தென்காசி,

தென்காசி அருகே காணாமல் போன 3 வயது சிறுமி, பல மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு ராமநதி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விளையாடிய சிறுமி மாயம்

தென்காசி மாவட்டம் ரவணசமுத்திரம், கூட்டுறவு வங்கித் தெருவைச் சேர்ந்தவர் ரசூல்மைதீன். இவருடைய 3 வயது மகள் அஹமது ஹாஜிரா. நேற்று மாலை சிறுமி அஹமது ஹாஜிரா தனது வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தார்.

சிறுமி திடீரென காணாமல் போனார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், சிறுமியை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து கடையம் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆற்றில் சடலமாக மீட்பு

தகவல் அறிந்ததும் கடையம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் உள்ளூர் பொதுமக்களுடன் இணைந்து, அப்பகுதி முழுவதும் தீவிரத் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், வீட்டின் அருகேயுள்ள ராமநதி ஆற்றில் சிறுமியின் உடல் சடலமாக மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசார் வழக்குப்பதிவு

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சிறுமியின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். விளையாட சென்ற 3 வயது சிறுமி ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம், பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே பெரும் நெஞ்ச உருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமி தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com