காதலிக்கு பணம் தேவை... நகை திருடி அடகு வைத்த இளைஞர் கைது

வீடு புகுந்து நகையை திருடி தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்துள்ளார்.
காதலிக்கு பணம் தேவை... நகை திருடி அடகு வைத்த இளைஞர் கைது
Published on

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட சின்ன சூண்டி பகுதியை சேர்ந்தவர் ஹரிராம். இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 42). இவர் அதே பகுதியில் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்று காலை அவர் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு அடைக்கப்பட்டு. உள்ளே பொருட்கள் சிதறி கிடப்பதை பார்த்தார். பையில் வைத்திருந்த 14 பவுன் நகை, ரூ.300 பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து புவனேஸ்வரி நியூஹோப் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு கோபாலகிருஷ்ணன், கூடலூர் இன்ஸ்பெக்டர் பவுலோஸ். சப்-இன்ஸ்பெக்டர் இப்ராஹிம் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவாகிய தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

அப்போது புவனேஸ்வரி வீட்டின் அருகே வசித்து வந்த மணிகண்டன் (21) என்பவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் தனது நண்பரான பந்தலூர் தாலுகா கொட்டாடு பகுதியை சேர்ந்த கவுதம் (19) என்பவருடன் சேர்ந்து வீடு புகுந்து நகையை திருடியதும், திருடிய நகையை பிதிர் காட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்ததும் தெரிய வந்தது. பின்னர் போலீ சார் அந்த நகையை மீட்டனர். இதுகுறித்து நியூஹோப் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டன், கவுதம் ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, கைது செய்யப்பட்ட மணிகண்டனுக்கு கோவையில் காதலி உள்ளார். அவருக்கு பணம் வழங்குவதற்காக மணிகண்டன் வீடு புகுந்து நகை திருடி தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்துள்ளார். காதலிக்காக திருட்டில் ஈடுபட்டு வழக்கில் சிக்கி விட்டார் என்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com