சிறுமி கொலை: அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - இந்திய கம்யூ. கட்சி

கைது செய்யப்பட்டுள்ள நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழ்நாடு முழுவதும் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இது போன்ற சம்பவங்கள் தொடர்வது வேதனை அளிக்கிறது. அதே நேரம் புகார் அளிக்கப்பட்டு சில மணி நேரங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கைது செய்யப்பட்டுள்ள நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தர தமிழ்நாடு அரசு உரிய உறுதியான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்.

மேலும் இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வண்ணம் அரசு போர்க்கால அடிப்படையில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கல்வி நிலையங்களில் மாணவ, மாணவிகள் மத்தியிலும் குழந்தைகள் மத்தியிலும் தன் பாதுகாப்பு குறித்தும், பாலின சமத்துவம் குறித்த உரையாடலை தொடங்கி அவற்றைப் பாடத்திட்டங்களாக உருவாக்கி கற்பிக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் பாலினம் சார்ந்த புரிதல் ஏற்படவும் மேலும் தற்காப்பை உறுதி செய்து கொள்ளவும் வாய்ப்பை உருவாக்க முடியும்.

பெண்கள் மற்றும் குழந்தைகளை சக மனித உயிராக பார்க்கும் மனநிலையை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com