‘வாழ்கின்ற காலத்திலேயே டாக்டர் ராமதாசுக்கு அங்கீகாரம் கொடுங்கள்’ அன்புமணி ராமதாஸ் பேச்சு

வாழ்கின்ற காலத்திலேயே டாக்டர் ராமதாசுக்கு அங்கீகாரம் கொடுங்கள் என்று சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
‘வாழ்கின்ற காலத்திலேயே டாக்டர் ராமதாசுக்கு அங்கீகாரம் கொடுங்கள்’ அன்புமணி ராமதாஸ் பேச்சு
Published on

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசின் 80வது பிறந்தநாளையொட்டி, சென்னை தியாகராயநகரில் நேற்று இரவு முத்து விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில துணை பொதுச் செயலாளர் சகாதேவன் தலைமை தாங்கினார். மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் ஏ.கே.மூர்த்தி, வி.ராதாகிருஷ்ணன், அமைப்பு செயலாளர் மு.ஜெயராமன், மாவட்ட செயலாளர் வே.வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக பா.ம.க. இளைஞரணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்துகொண்டு பேசியதாவது:

தமிழகத்தில், ஏன் இந்திய அளவிலேயே ஒரு சுயம்பு என்றால் அது டாக்டர் ராமதாஸ் தான். மற்ற அரசியல் கட்சிகள் போல பா.ம.க. அல்ல. இப்போதுள்ள அரசியல் கட்சிகளில் வழிநடத்துபவர்கள் மட்டுமே தலைவர்களாக இருக்கின்றனர். ஆனால், மாபெரும் ஒரு கட்சியை நிறுவி நடத்தி வரும் ஒரே தலைவர் டாக்டர் ராமதாஸ். கட்சி தவிர 27 இயக்கங்களையும் நடத்தி வருகிறார். எத்தனை சாதனைகள் செய்தாலும் மக்களுக்காக அரும்பாடுபட்டு உழைத்தாலும் இன்று வரை ஒரு அங்கீகாரம் இல்லாத தலைவராகவே டாக்டர் ராமதாஸ் இருக்கிறார்.

வறட்சி வரும், வெள்ளம் வரும், அதை செய்யுங்கள், இதை செய்யுங்கள் என்று 20, 30 வருடங்களுக்கு முன்பே அவர் தொண்டை கிழிய கத்தினார். ஆனாலும், மக்கள் அவரை எண்ணிப் பார்க்கவில்லை.

இடஒதுக்கீடு பெற்றுத்தந்து மற்ற தலைவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தார். சட்டசபை, நாடாளுமன்றத்தில் என் கால் படாது என்று சத்தியம் செய்து, அந்த கொள்கை முடிவில் உறுதியாக இருக்கிறார். ஆனாலும் தமிழக மக்கள் அவருக்கு அங்கீகாரம் தரவில்லை. பா.ம.க.வின் லட்சியம் தமிழகத்தின் முன்னேற்றம் தான். அதற்காகத்தான் போராடுகிறோம், போராடி கொண்டிருக்கிறோம்.

இன்னும் 10, 20 ஆண்டுகளுக்கு பின்னர் தான் அவரைப் பற்றி நீங்கள் (மக்கள்) தெரிந்துகொள்வீர்கள். இல்லை என்றால், இந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் ஏமாந்திருப்பார்களா?. எனவே, இப்போதும் சொல்கிறேன். பெரியார் போன்ற தலைவர்களை வாழும் காலத்தில் ஏளனம் செய்தார்கள், அவமானப்படுத்தினார்கள். ஆனால், அந்த மாபெரும் தலைவர்கள் இறந்த பின்பு அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். இந்த முறை அதை செய்யாதீர்கள். வாழும் காலத்திலேயே டாக்டர் ராமதாசுக்கு அங்கீகாரம் கொடுங்கள்.

10 ஆண்டுகளுக்கு பிறகு பேசி எந்தப்பயனும் ஏற்படப்போவதில்லை. இதை ஆணவத்தில் சொல்லவில்லை, அனுபவத்தில் பேசுகிறேன். கிராமத்தில் இப்போது வேலைவாய்ப்புகள் இல்லை. முறையான வசதிகள் இல்லை. அதற்காக நகர மயமாக்கலை நினைத்து நாங்கள் பெருமைப்பட போவதும் இல்லை. எங்களது நோக்கம், மக்கள் நகரத்தில் இருந்து மீண்டும் கிராமங்களுக்கே செல்ல வேண்டும். அதுதான் பா.ம.க.வின் லட்சியம்.

பா.ம.க.வுக்கு நீங்கள் அங்கீகாரம் தாருங்கள். அதன் அடிப்படையில் எங்கள் கட்சியின் முடிவுகள் இருக்கும். எத்தனையோ முறை பிரதமரை சந்தித்து பேசியிருக்கிறேன். ஆனால் இந்த முறை கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்துக்கு அதிகம் வலியுறுத்தியிருக்கிறேன். டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வேண்டாம். பேரறிவாளன் உள்பட 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று முழுக்க.. முழுக்க.. தமிழகத்தின் நலனுக்காகவே நான் பேசியிருக்கிறேன்.

நாங்கள் அடையாளத்துக்கு கட்சி நடத்தவில்லை. மக்களுக்காகவே நடத்துகிறோம். பாளையங்கோட்டை சிறையை தவிர எல்லா சிறைகளையும் டாக்டர் ராமதாஸ் பார்த்துவிட்டார். மக்களுக்காகவே வாழ்கின்ற அந்த தலைவருக்கு வாழ்கின்ற போதே மரியாதை கொடுங்கள். நான் இதை அவரது மகனாக கேட்கவில்லை. இந்த சமுதாயத்தின் ஒரு சாதாரண குடியானவனாக சொல்கிறேன்.

எனவே, பா.ம.க.வுக்கு இனியாவது ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள். இங்கிலாந்துக்கு இணையான சுகாதார திட்டங்களை தமிழகத்தில் முன்னெடுப்போம். நாங்கள் ஆளும் கூட்டணியில் இருந்தாலும், இல்லை என்றாலும், கொள்கை அடிப்படையிலும், மக்களுக்கு எதிரான திட்டங்களிலும் சமரசம் செய்து கொள்ளமாட்டோம். தமிழக முன்னேற்றமே பா.ம.க.வின் நோக்கம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com