

பெரம்பூர்,
சென்னை திரு.வி.க.நகர் முனியப்பன் தெருவைச் சேர்ந்தவர் சந்திரா (வயது 50). இவர், வட்டிக்கும், தங்க நகைகளை வாங்கிக்கொண்டும் பணம் கொடுத்து வந்தார். இவர், வீட்டில் தனியாக இருந்தபோது கைக்குழந்தையுடன் வந்த இளம்பெண் ஒருவர், எனது கணவர் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு மருத்துவ உதவி செய்ய உடனடியாக ரூ.25 ஆயிரம் தேவைப்படுகிறது என்று கூறி 3 பவுன் நகைகளை கொடுத்து பணம் தரும்படி கேட்டார்.
அதை உண்மை என்று நம்பிய சந்திரா, நகைகளை வாங்கிக்கொண்டு ரூ.25 ஆயிரம் கொடுத்தார். அதை பெற்றுக்கொண்ட அந்த பெண், அங்கிருந்து சென்றுவிட்டார். அதன்பிறகு சந்திரா, அந்த நகைகளை அருகில் உள்ள நகைக்கடையில் பரிசோதித்து பார்த்தபோது அவை போலி நகைகள் என்பது தெரியவந்தது.
இதுபற்றி திரு.வி.க.நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி நகைகளை கொடுத்து மோசடியில் ஈடுபட்ட இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.