

சென்னை,
தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இயக்குநராக, நடிகராக விளங்கிய பாரதிராஜா அவர்களின் மறைவு மிகவும் வருத்தத்துக்குரியது. 1977 ல் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி தன் இறுதி மூச்சு வரை தமிழ் திரையுலகத்திற்காக பாடுபட்டவர்.
பல்வேறு நடிகர் நடிகர்களை அறிமுகப்படுத்தி, புகழ் பெற வைத்த பெருமைமிக்கவர். குறிப்பாக சினிமாவில் யதார்த்தத்தையும், கிராம வாழ்க்கை முறையையும் மக்கள் மனம் கவரும் வகையில் வெளிக்கொணர்ந்தவர்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் இயக்குநர் இமயம் எனப் பேரும் புகழும் பெற்றவர். இயக்குநராகவும், பல படங்களில் குணசித்திரக் கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களின் பாரட்டைப் பெற்றவர். தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கும், கலையுலகத்திற்கும் மிகுந்த அர்ப்பணிப்போடு பணியாற்றியவர்.
மறைந்த பாரதிராஜாவின் திரைப்பயணம் திரையுலக வரலாற்றில் காலம் கடந்து புகழோடு நிலைத்து நிற்கும். அவரது கலைப்படைப்புகளுக்கு தனிச்சிறப்பு உண்டு. தமிழ் திரையுலகிற்கு ஆற்றிய பங்களிப்புக்காக பத்ம ஸ்ரீ கலைமாமணி என மத்திய மாநில அரசுகளின் பல்வேறு விருதுகளைப் பெற்ற போற்றுதலுக்குரியவர்.
அவரது மறைவு அவரது குடும்பத்திற்கும், தமிழ் திரையுலகிற்கும் மிகப்பெரிய இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழ் திரையுலகத்தினருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.