

சென்னை,
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தற்போது மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்படாத சூழலில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற முடியாமல் குறுவை சாகுபடி பெரிதளவு பாதிக்கப்பட்டு, நெல் விளைச்சல் பெருமளவு குறையும். மேலும் நீண்ட கால பயிர்களை விளைவிக்கும் சம்பா சாகுபடிக்கும் மேட்டூர் அணையின் காவிரி நீர் தேவை.
மேட்டூர் அணை திறக்கப்படாத சூழலில் லட்சக்கணக்கான ஏக்கர் பாசனத்திற்கு நிலத்தடி நீரை அதிகம் பயன்படுத்த நேரிட்டால் நிலத்தடி நீர்மட்ட சரிவும் ஏற்படும். மேலும் அதிகப்படியான மின்சாரப் பயன்பாடும், மின் வெட்டும் விவசாயத் தொழிலுக்கு சிரமத்தை ஏற்படுத்தும்.
இச்சூழலில் மேட்டூர் அணையின் நீரை நம்பியிருக்கும் டெல்டா விவசாயிகள் உள்ளிட்ட பொது மக்களுக்கும் உதவிடும் வகையில் தமிழக அரசு செயல்பட வேண்டும்.எனவே தமிழக அரசு கர்நாடக அரசிடம் பேசி தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரைப் பெறவும், மும்முனை மின்சாரத்தை தடை இல்லாமல் வழங்கவும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.