

சென்னை,
சென்னையில் திருமண நிகழ்ச்சிகள், மெரினா கடற்கரைக்கு பொழுதை கழிக்க வருபவர்களை குதூகலப்படுத்த குதிரைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சவாரி தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வந்த குதிரை நோய்வாய்ப்பட்டு இறந்தது.
இதையடுத்து அந்த குதிரையை பரிசோதித்ததில் 'கிளாண்டர்ஸ்' என்ற நோய் தாக்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த குதிரையுடன் தொடர்பில் இருந்த மற்ற குதிரைகளை தனிமைப்படுத்த கால்நடை பராமரிப்புத்துறை அறிவுறுத்தல்களை வழங்கியது.
இதற்கிடையே சைதாப்பேட்டை கால்நடை பன்முக மருத்துவமனையின் நோய் நிகழ்வியல் பிரிவு மருத்துவக்குழு சோதனை 140-க்கும் மேற்பட்ட குதிரைகளுக்கு சோதனை செய்துள்ளது.
சேப்பாக்கம் ரெயில் நிலையம் அருகே வளர்க்கப்பட்டு வரும் குதிரைகளுக்கு நேற்று சைதாப்பேட்டை அரசு கால்நடை பராமரிப்பு துறையினர் ரத்த மாதிரிகளை சேகரித்தனர். இதற்கான பரிசோதனை செய்யப்பட்டு வேறு எந்த குதிரைக்கும் 'கிளாண்டர்ஸ்' நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறதா? என்பது இன்னும் ஓரிரு தினங்களில் தெரியவரும்.