மதுரை-குருவாயூர் ரெயிலில் கண்ணாடி மேற்கூரை பெட்டிகள்

சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு செல்லும் பயணிகளை கவருவதற்காக இந்த பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.
மதுரை-குருவாயூர் ரெயிலில் கண்ணாடி மேற்கூரை பெட்டிகள்
Published on: 

மதுரை,

இந்திய ரெயில்வேயில், இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகள் வழியாக செல்லும் ரெயில்களில் பயணிகள் இயற்கையை கண்டு ரசிக்கும் வகையி லான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக 'விஸ்டோடம்' என்ற பெயரிலான ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு கடந்த 2017-ம் ஆண்டு முதல் குறிப்பிட்ட பகுதிகளில் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த ரெயில் பெட்டிகளில் மேற்கூரை கண்ணாடியாக இருக்கும். அதன் வழியாக மலை, கடல் அழகை ரசிக்க முடியும். முதலில் தூரந்தோ எக்ஸ்பிரஸ், பின்னர் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றில் பெரிய கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டன. அதனை தொடர்ந்து, வந்தே பாரத் ரெயில்களில் அகலமான கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டு இயக்கப்படுகின்றன.

மதுரை-குருவாயூர் ரெயில்

இதே போல் விஸ்டோடம் பெட்டிகளில் அகலமான கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் மேற்கூரையில் கண்ணாடி பொருத்தப்பட்டு இருக்கும் நிலையில், ரெயில் பெட்டிக்குள் இருந்து வெளியில் பார்த்து ரசிக்கும்படி வடிவமைக்கப்பட்டு உள்ளது.

சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு செல்லும் பயணிகளை கவருவதற்காக இந்த பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.

இதற்கிடையே, மதுரையில் இருந்து குருவாயூருக்கு தினசரி ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மதுரையில் இருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 2.15 மணிக்கு குருவாயூர் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் இந்த ரெயில் குருவாயூரில் இருந்து அதிகாலை 5.50 மணிக்கு புறப்பட்டு இரவு 7.10 மணிக்கு மதுரை வந்தடைகிறது.

மதுரையில் இருந்து தென்காசி, செங்கோட்டை, புனலூர் வழியாக குருவாயூருக்கு இயக்கப்படும் ரெயிலானது, விஸ்டோடம் பெட்டிகளுடன் கூடிய ரெயிலாக இயக்கப்பட உள்ளது.

22-ந் தேதி முதல்

இந்த ரெயில் (வ.எண். 16327/16328) இருமார்க்கங்களிலும் வருகிற 22-ந் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. இந்த பாதையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மலை, தென்காசி பொதிகை மலை, ஆரியங்காவு பாலம், தென்மலை, புனலூர், கொட்டாரக்கரை உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை பயணிகள் ரசிக்கும் வகையில் இந்த ரெயில் பயணம் இருக்கும்.

நாட்டின் முதல் விஸ்டோடம் ரெயில் (வ.எண்.58501/58502) விசாகப்பட்டினம்-கிரந்துல் இடையே இயக்கப்பட்டு வருகிறது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 995 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள ரெயில் பாலம் வழியாக இந்த ரெயில் இயக்கப்படுகிறது. அத்துடன், 58 குகைகள், 84 பாலங்கள், ஹைதிகி நீர்வீழ்ச்சி, கிரீன்வேலி மற்றும் ஆந்திர மாநிலத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத தலங்கள் வழியாக செல்கிறது.

பிரீமியம் கட்டணம்

இந்த நிலையில், மதுரை-குருவாயூர் விஸ்டோடம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16327) வருகிற 22-ந் தேதி முதல் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 15-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் குருவாயூர்-மதுரை விஸ்டோடம் எக்ஸ்பிரஸ் (வ.எண்.16328) வருகிற 23-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 16-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.

ஆனால், இந்த ரெயிலில் பயணம் செய்ய பிரீமியம் கட்டணம் வசூலிக்கப் படும். அதாவது, சதாப்தி ரெயிலின் எக்சிக்யூட்டிவ் வகுப்பு கட்டணத்தை விட சுமார் ஒரு மடங்கு அதிகமாக வசூலிக்கப்படும். சதாப்தி ரெயிலில் அடிப்படை கட்டணமாக 50 கி.மீ. தூரத்துக்கு ரூ.387 வசூலிக்கப்படும். 100 கி.மீ. தூரத்துக்கு ரூ.490 அடிப்படை கட்டணமாக வசூலிக்கப்படும். இது தவிர, முன்பதிவு கட்டணம், கிளார்க் கட்டணம், அதிவிரைவு ரெயிலுக் கான கட்டணம், துணை கட்டணம் என தனியாக வசூலிக்கப்படும். இதில், சலுகை கட்டண டிக்கெட் கிடையாது.

10 சதவீத தள்ளுபடி

பயணிகளுக்கான இறுதி அட்டவணை தயாரிக்கப்பட்ட பின்னர் காலியாக உள்ள இருக்கைகளை 10 சதவீத தள்ளுபடி கட்டணத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவை பொறுத்தமட்டில் ரெயில் ஒன் செயலி மூலம் மட்டுமே மேற்கொள்ள முடியும். இந்த ரெயில் பயணிகளிடம் பெரி தும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ரெயிலில் 2 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், ஒரு 3 அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 8 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட் டுள்ளன. தற்போது ஒரு பொது பெட்டிக்கு பதிலாக விஸ்டோடம் பெட்டி இணைக்கப்படுகிறது. இந்த பெட்டிகள் அனைத்தும் எல்.எச்.பி. வகை பெட்டிகள் ஆகும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com