

சென்னை,
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராக இருந்தவர் ஞானதேசிகன். கடந்த நவம்பர் மாதத்தில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. ஏற்கனவே வயது முதிர்வு காரணமாக உடல்சார்ந்த பாதிப்புகள் இருந்ததால், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல் இருந்து வந்தது.
இதனை தொடர்ந்து தீவிர சிகிச்சைக்கு பிறகு கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த ஞானதேசிகன், தனது வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து மீண்டும் அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஞானதேசிகன், சிகிச்சை பலனின்றி இன்று காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராக இருந்த ஞானதேசிகன், அந்த கட்சியின் மூத்த தலைவராக தொடர்ந்து செயல்பட்டு வந்தார். அவரது மறைவுச் செய்தியறிந்து அந்த கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மருத்துவமனை வளாகத்தின் முன் திரண்டுள்ளனர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகனின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.