

மேலப்பாளையம்,
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், நெல்லை மேலப்பாளையம் கால்நடை சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. இங்கு வேலி ஆடு ஒன்று அதிகபட்சமாக ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனையானது. இன்று ஒரே நாளில் ரூ.4 கோடியை தாண்டி வர்த்தகம் நடைபெறும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தென் மாவட்டங்களில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆட்டுச்சந்தைக்கு அடுத்தபடியாக மேலப்பாளையம் ஆட்டுச்சந்தை புகழ்பெற்றதாக விளங்குகிறது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் சந்தை நடைபெறுவது வழக்கம். பண்டிகைக் காலங்களில் இந்த சந்தையில் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறும்.
இந்த நிலையில், வருகிற 8-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், இன்று அதிகாலை முதலே மேலப்பாளையம் சந்தையில் விற்பனை களைகட்டியது. ஆடுகளை வாங்குவதற்காக வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் இறைச்சிக் கடைக்காரர்கள் ஏராளமானோர் குவிந்தனர். மொத்தமாக ஆடுகளை வாங்க வந்த வியாபாரிகள் தலா 8 முதல் 10 ஆடுகள் வரை வாங்கிச் சென்றனர்.
ஆடுகளை சந்தைக்குள் கொண்டு வருவதற்காக மாநகராட்சி சார்பில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டன. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து கால்நடை வளர்ப்போர் மினி லாரிகளில் ஆடுகளை மொத்தமாக கொண்டு வந்து விற்பனை செய்தனர்.
குறும்பாடுகள், செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் என 3 வகையான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. வெளியூர்களுக்கு இறைச்சிக்காக ஆடுகளை வாங்கிச் சென்ற வியாபாரிகள் செம்மறி ஆடுகளை அதிகளவில் வாங்கினர். கிராமப்புறங்களில் இருந்து வந்தவர்கள் வெள்ளாடுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் மட்டுமின்றி, தேனி, மதுரை மற்றும் கேரளாவைச் சேர்ந்த வியாபாரிகளும் அதிகளவில் வந்திருந்தனர்.
ஆடுகளின் உயரம், எடை மற்றும் இறைச்சியின் அளவைப் பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் வேலி ஆடு என அழைக்கப்படும் ஒருவகை ஆடு அதிகபட்சமாக ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனையானது. ஒரு செம்பு கிடா ரூ.28 ஆயிரத்துக்கும், சண்ட கிடா ரூ.22 ஆயிரத்துக்கும் விலை போனது. பாவூர்சத்திரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒரு கிடா ரூ.40 ஆயிரத்துக்கு விற்பனையானது.
ஆடுகளுக்கு நல்ல விலை கிடைத்ததுடன், வழக்கத்தை விட விற்பனையும் அதிகமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஆட்டுச்சந்தையில் ஆடுகள் மட்டுமின்றி கருவாடு வகைகள், கோழி உள்ளிட்ட இறைச்சி வகைகளின் விற்பனையும் அமோகமாக நடைபெற்றது. இதனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று மேலப்பாளையம் சந்தையில் ரூ.4 கோடியை தாண்டி வர்த்தகம் நடைபெறும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.