

திருமங்கலம்,
தீபாவளி பண்டிகையையொட்டி திருமங்கலம் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். தென் மாவட்டங்களில் முக்கிய ஆட்டுச் சந்தையாக விளங்கும் இங்கு, திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
இந்த நிலையில், வருகிற 8-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, அசைவ உணவு பிரியர்கள் இறைச்சி வாங்க ஆர்வம் காட்டுவார்கள் என்பதால் நேற்று சந்தையில் வழக்கத்தைவிட அதிகளவில் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. மொத்தம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் சந்தைக்கு வந்தன.
திருமங்கலம் ஆட்டுச் சந்தையில் விற்பனை செய்யப்படும் ஆடுகளின் இறைச்சி சுவை மிகுந்ததாக இருப்பதால், மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை வாங்க வந்திருந்தனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடுகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டதால், அவற்றின் விலையும் கணிசமாக உயர்ந்தது. ஒரு ஆடு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ஆடுகளின் விலை ரூ.1,000 முதல் ரூ.3,000 வரை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆட்டு வியாபாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டு கிலோ ரூ.750-க்கு விற்பனை செய்யப்பட்ட ஆட்டிறைச்சி, தற்போது ரூ.950 முதல் ரூ.1,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகை என்பதால் அதிக விலை கொடுத்து ஆடுகளை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் விலைக்கு இறைச்சி விற்பனை செய்ய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது என்றனர்.
ஆடுகளை வளர்ப்பதற்கான தீவனச் செலவு உள்ளிட்ட பராமரிப்புச் செலவுகள் அதிகரித்துள்ளதால், ஆடுகளின் விலையும் உயர்ந்துள்ளதாக ஆட்டு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
அதிகாலை 2 மணி முதலே ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகியுள்ளதாக சந்தை குத்தகைதாரர்கள் தெரிவித்தனர்.
திருமங்கலம் ஆட்டுச் சந்தைக்கு வாரந்தோறும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் வந்து செல்லும் நிலையில், அங்கு போதிய இடவசதி இல்லை என வியாபாரிகள் புகார் தெரிவிக்கின்றனர். கடும் நெரிசல் காரணமாக ஆடுகளை விற்பனை செய்வதிலும், வாங்கிச் செல்வதிலும் சிரமம் ஏற்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
எனவே, ஆட்டுச் சந்தையை வேறு இடத்திற்கு மாற்றி, வியாபாரிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.