

கள்ளக்குறிச்சி,
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் ஒரே நாளில் சுமார் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆகி சாதனை படைத்துள்ளது. இதனால் ஆடு வளர்ப்போரும் வியாபாரிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறும் இந்த புகழ்பெற்ற சந்தைக்கு, தீபாவளி பண்டிகையை ஒட்டி இந்த வாரம் வழக்கத்தை விட கூடுதல் எண்ணிக்கையில் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. திருச்சி, சேலம், பெரம்பலூர், கடலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வியாபாரிகளும் விவசாயிகளும் உளுந்தூர்பேட்டை சந்தையில் குவிந்தனர்.
அதிகாலை 3 மணிக்கே தொடங்கிய இந்த சந்தையில், வியாபாரிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. பண்டிகை தேவை அதிகமாக இருந்ததால், சந்தை தொடங்கிய வெறும் 3 மணி நேரத்திற்குள் கொண்டு வரப்பட்ட பெரும்பாலான ஆடுகள் சுமார் ரூ.3 கோடிக்கு மின்னல் வேகத்தில் விற்றுத் தீர்ந்தன.
சந்தைக்கு வந்த ஆடுகளின் எடை மற்றும் தரத்திற்கு ஏற்ப விலையில் மாற்றம் இருந்தது. ஒரு ஆடு குறைந்தபட்சம் ரூ.7,000 முதல் அதிகபட்சமாக ரூ.20,000 வரை விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டது.
வழக்கமான நாட்களை விட இந்த வாரம் தீபாவளி வியாபாரம் மிக அமோகமாக இருந்ததாலும், குறுகிய நேரத்தில் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெற்றதாலும், ஆடு வளர்க்கும் விவசாயிகளும் வியாபாரிகளும் பெரும் லாபமடைந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.