கோகுல்ராஜ் கொலை வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

கோகுல்ராஜ் கொலை வழக்கில், சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட யுவராஜ் உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்ப் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோகுல்ராஜ் கொலை வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
Published on

சென்னை,

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ். இவர் கடந்த 2015-ம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். அவர் சுவாதி என்ற இளம்பெண்ணை காதலித்ததாகவும், இந்த விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டதாக பதிவான வழக்கு, ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் மதுரை மாவட்ட சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது. விசாரணை முடிவில், இந்த வழக்கில் கைதான யுவராஜ், அருண், குமார் என்ற சிவகுமார், சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகிய 10 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்தும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் 8-ந்தேதி தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் தங்களுக்கு விதித்த தண்டனையை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில், இந்த மனுக்களின் விசாரணை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.ஆனந்த வெங்கடேஷ் ஆகியோர் அமர்வில் இன்று நடைபெற்றது. யுவராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் கைப்பற்றப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவு உள்ளிட்ட மின்னணு ஆதாரங்களை சேகரித்ததில் குறைகள் உள்ளதாகவும், அந்த தவறுகளை சுட்டிக்காட்டி தங்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என வாதிட்டார்.

இதையடுத்து அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோகுல்ராஜ் திட்டமிட்டு கொல்லப்பட்டதாகவும், அரசுத்தரப்பு சாட்சிகளும் இதனை உறுதிப்படுத்துவதகவும் வாதிட்டார். இதனிடையே கோகுல்ராஜ் கடைசியாக உயிருடன் காணப்பட்ட திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் மற்றும் கோகுல்ராஜ் சடலமாக கண்டெடுக்கப்பட்ட ரயில்பாதை ஆகிய பகுதிகளை நீதிபதிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததையடுத்து மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com