தங்க நகைக்கடன் விதிமுறைகள் மக்களின் பொருளாதாரத்திற்கு விடப்பட்ட சவால்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தங்கம் ஆடம்பரத்துக்கான தங்கமல்ல ஆத்திர அவசரத்திற்கான தங்கம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தங்க நகைக்கடன் விதிமுறைகள் மக்களின் பொருளாதாரத்திற்கு விடப்பட்ட சவால்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

தங்க நகைக்கடன் வழங்குவதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி கடுமையாக்கியுள்ளது. இந்த விதிமுறைகள் தங்க நகைக்கடன் வாங்குவதை முடக்கும் நடவடிக்கை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மேலும், இந்த விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல், தங்க நகைக்கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி வரையறுத்துள்ள விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில், தங்க நகைக்கடன் விதிமுறைகள் மக்களின் பொருளாதாரத்திற்கு விடப்பட்டுள்ள சவால் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்

கையில் இருப்பது அரையணா காசாக இருந்தாலும், அதைச் சேர்த்து வைத்து, குண்டுமணி தங்கமாவது வாங்குவது நம் மக்களின் இயல்பு! இந்த தங்கம் ஆடம்பரத்துக்கான தங்கமல்ல; ஆத்திர அவசரத்திற்கான தங்கம்!

தங்கநகைகளை வங்கிகளில் வைத்து கண்ணியமான முறையில் கடன் பெறுவதற்கு இடையூறாக, தேவையற்ற கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி முன்மொழிந்திருப்பது, நம் நாட்டின் ஏழை - எளிய, நடுத்தர மக்களின் பொருளாதாரத்திற்கும் கண்ணியத்திற்கும் விடப்பட்டிருக்கும் சவால்!

ஏற்கெனவே அநியாய வட்டிக்குக் கடன் வாங்கி வட்டிக்கு கடன் கொடுப்பவர்களிடம் இடம் அவதியுறுவதும் - அவசரத் தேவைகளுக்காக லோன் செயலிகளில் கடன் பெற்றுச் சொல்லொணாத் துயருக்கும் ஆளாகியிருக்கும் மக்களைக் காப்பாற்றச் சிந்திப்பதை விட்டுவிட்டு, அந்தக் கொடூர வட்டி வலையில் சிக்க வைத்திடும் செயல்களைச் செய்வது ஏற்புடையதல்ல!

எனவே, தங்க நகைக்கடன் பெறுவதற்கான விதிமுறைகளைத் தளர்த்தி, ஏழை - எளிய, நடுத்தர மக்கள் கண்ணியத்துடன் வாழ உடனே நடவடிக்கை எடுத்திட வேண்டும் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்,  ரிசர்வ் வங்கி கவர்னரையும் கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com