

சென்னை,
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மார்ச் 30-ம் தேதி தொடங்கும் வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 6-ம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. ஏப்ரல் 23-ம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தல் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதன் காரணமாக, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதன்படி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணமில்லாமல் எடுத்துச் செல்லப்படும் ரொக்கப்பணம் மற்றும் பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இதற்காக, மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், சென்னை தியாகராய நகர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அசோக் நகர் 11-வது அவென்யூவில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை ஏற்றிக் கொண்டு சவுகார்பேட்டையிலிருந்து கிண்டி-ஈக்காட்டுத்தாங்கல் கலைமகள் நகரில் உள்ள பார்சல் சர்வீஸ் நிறுவனம் நோக்கி 21 வாகனங்கள் அடுத்தடுத்து வந்தது. அதில் 20 வாகனங்களில் இருந்த பொருட்களுக்கு உரிய ஆவணங்கள் இருந்தன.
ஆனால், ஒரு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களுக்கு எந்த ஆவணமும் இல்லை. இதையடுத்து, அந்த வாகனத்தில் இருந்த ரூ.77.29 கோடி மதிப்பிலான 381.762 கிலோ எடையுள்ள தங்கம், வெள்ளிப் பொருட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அதனை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் சவுகார்பேட்டையிலிருந்து தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை அங்குள்ள வியாபாரிகளிடமிருந்து மொத்தமாக பெற்று, கிண்டியிலுள்ள ஏற்றுமதி நிறுவன அலுவலகத்துக்கு கொண்டு சென்றதும், அங்கிருந்து இந்தியாவில் உள்ள மற்ற மாநில வியாபாரிகளுக்கு விநியோகம் செய்வதற்காக இந்த நகைகளை எடுத்து வந்ததாக நகையை கொண்டு வந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடக்கிறது.