மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு

நடைபயிற்சிக்கு சென்ற மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்த 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு
Published on

நடைபயிற்சிக்கு சென்ற மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்த 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நடைபயிற்சி

திருச்சி லால்குடி உத்தமனூரை சேர்ந்தவர் மேரி டாலர்ஸ் கேத்ரின் (வயது 60). இவர் புதுவை நெல்லித்தோப்பில் வசித்து வரும் அவரது மகள் ரோஸ்மேரி வீட்டிற்கு சமீபத்தில் வந்தார். கேத்ரின் தினமும் காலை நடைபயிற்சி செய்வது வழக்கம்.

அதன்படி அவர், நேற்று காலை செயிண்ட் ராக் வீதியில் இருந்து அருள் படையாச்சி வீதி நோக்கி நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென்று மேரி டாலர்ஸ் கேத்ரின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். உடனே சுதாரித்துக்கொண்ட அவர் சங்கிலியை இறுக்கி பிடித்துக்கொண்டார். இருப்பினும் சங்கிலியின் ஒருபாதி கேத்ரின் கையிலும், மீதிபாதி கொள்ளையர்களிடமும் இருந்தது.

கத்தியை காட்டி மிரட்டல்

இதற்கிடையே நிலைதடுமாறிய மேரி டாலர்ஸ் கேத்ரின் கீழே விழுந்தார். உடனே மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்ந்திருந்த வாலிபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மேரி டாலர்ஸ் கேத்ரினிடம் மீதி சங்கிலியும் கேட்டு மிரட்டினார். அதற்குள் அக்கம் பக்கத்தினர் அங்கு வந்ததால் அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர்.

இது பற்றி தகவல் அறிந்த உருளையன்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் வாலிபர்களின் உருவம் பதிவாகியுள்ளதா என்றும் ஆய்வு செய்தனர்.

நகை பறிப்பு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய வாலிபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com