

இந்தியாவில் தங்கக்கடன் சந்தை ரூ.23 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவில் தங்கக்கடன் சந்தை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. சி.ஆர்.ஐ.எப் கிரெடிட் இன்பர்மேஷன் சர்வீசஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நடப்பு நிதியாண்டில் 2-ம் காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) தங்கக்கடன் சந்தை 60.6 சதவீதம் உயர்ந்தது.
அதாவது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.23 லட்சத்து 3 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2024-ல் 2-ம் காலாண்டில் ரூ.10.7 லட்சம் கோடியாக இருந்த இந்த மதிப்பு, நடப்பு ஆண்டில் இருமடங்கிற்கும் மேலாக உயர்ந்துள்ளது. சிறிய நகரங்களில் வசிப்பவர்களின் பங்களிப்பு இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது.
தென்னிந்திய மாநிலங்கள் தொடர்ந்து சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதில் தமிழ்நாடு ரூ.6.9 லட்சம் கோடி நிலுவைத் தொகையுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் ஆந்திரப் பிரதேசம் (ரூ.3.7 லட்சம் கோடி), கர்நாடகா (ரூ.2.4 லட்சம் கோடி), தெலுங்கானா (ரூ.2.1 லட்சம் கோடி) மற்றும் கேரளா (ரூ.1.7 லட்சம் கோடி) உள்ளன. ஒட்டுமொத்த சந்தையில் 70 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை தென்னிந்தியாவே கொண்டுள்ளது.
தங்கக்கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை 2023 செப்டம்பரில் 3.7 கோடியாக இருந்த நிலையில், 2026 செப்டம்பரில் 5.6 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் பெண் கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை 2.4 கோடி யாக உள்ளது. இது மொத்த தங்கக் கடன் சந்தையில் 42.2 சதவீதமாகும்.
மேலும், நடப்பு நிதியாண்டின் 2-ம் காலாண்டில் மட்டும் 45.7 லட்சம் புதிய கடன் வாங்குபவர்கள் இணைந்துள்ளனர். அதேசமயம், ஜூன் மற்றும் செப்டம்பர் 2026-க்கு இடைப்பட்ட காலத்தில் கடன் திருப்பிச் செலுத்துவதில் சிறிய அளவிலான சுணக்கம் ஏற்பட்டுள்ளதால், கடன் அபாயங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம் என்று அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.