மத்திய 'பட்ஜெட்டில்' இறக்குமதி வரி அதிகரிப்பு தங்கம் விலை உயர்வுக்கு காரணமா? வியாபாரிகள், இல்லத்தரசிகள் கருத்து

மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்வு அறிவிப்பு வெளியான உடனேயே உள்நாட்டில் தங்கம் விலை எகிறியுள்ளது.
மத்திய 'பட்ஜெட்டில்' இறக்குமதி வரி அதிகரிப்பு தங்கம் விலை உயர்வுக்கு காரணமா? வியாபாரிகள், இல்லத்தரசிகள் கருத்து
Published on

1920-ம் ஆண்டில் ரூ.21-க்கு விற்பனையான ஒரு பவுன் தங்கம் இன்று ரூ.44 ஆயிரத்தை கடந்துள்ளது. 103 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 96 மடங்கு விலையேறி இருக்கிறது.

திருமணம், கோவில் கொடைகள் மற்றும் விசேஷ நிகழ்வுகளில் தங்க நகைகள் அணிவதை பலரும் கவுரமாக கருதுவதால் அதன் மீதான மோகம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் அதன் விலை தொடர்ந்து உயர்வை கண்டாலும் மவுசு மட்டும் குறைவது இல்லை. ஒவ்வொரு ஆண்டும் தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு வரலாற்றில் இடம் பிடித்து வருகிறது.

பதுக்கல்

இந்த சூழலில் மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்வு அறிவிப்பு வெளியான உடனேயே உள்நாட்டில் தங்கத்தை மொத்த வியாபாரிகள் அதிகளவில் பதுக்கி இருக்கலாம் என்று பரபரப்பு வெளியாகி உள்ளது. இதன் எதிரொலியாக தங்கம் விலை எகிறியுள்ளது.இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு பவுன் தங்கம் ரூ.50 ஆயிரத்தை கடப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி இல்லத்தரசிகளை கதிகலங்க செய்துள்ளது.

தங்கம் விலை 'ராக்கெட்' வேகத்தில் உயர்ந்து வரும் வேளையில் வியாபாரிகள், இல்லத்தரசிகள் அதுபற்றி தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

கடத்தலுக்கு வழிவகுக்கும்

தமிழ்நாடு தங்க நகை வியாபாரிகள் கூட்டமைப்பின் முக்கிய ஆலோசகர் சையது அகமது:- பெண்கள் தங்க ஆபரணங்கள் அணிவது பாரம்பரிய கலாசாரமாக தொன்று தொட்டு இருந்து வருகிறது. உள்நாட்டில் தங்க உற்பத்தி இல்லை என்றாலும் வெளிநாட்டில் இருந்து ஆண்டுக்கு தோராயமாக 600 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கான இறக்குமதி சுங்க வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வந்தோம். ஆனால் மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி வரியை குறைப்பதற்கு பதிலாக உயர்த்தி இருப்பது வேதனைக்குரியது. தங்கம் விலை அதிகரிப்பு சட்டவிரோத கடத்தலுக்கு வழிவகுத்து விடும்.

தற்போது தங்க நகை உயர்வு திருமண வீட்டாரை கஷ்டத்திலும், கவலையிலும் ஆழ்த்தி உள்ளது. எனவே மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும். எங்கள் கோரிக்கையை ஏற்று வரியை குறைக்க வேண்டும். இந்த கோரிக்கையை நிறைவேற்றினால் தமிழ்நாட்டு பெண்களின் அன்பும், ஆதரவும் அவருக்கு கிடைக்கும்.

விரைவில் ரூ.50 ஆயிரம்

மெட்ராஸ் வைரம், தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி:- டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, பண வீக்கம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் பங்குச்சந்தை வீழ்ச்சியை சந்தித்து வருவதால், உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பார்வை தங்கத்தின் மீது திரும்பி உள்ளது. இதனால் தங்கத்தின் மீதான முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக தங்கம் விலை ஏறுமுகத்தில் செல்ல தொடங்கி உள்ளது. தொலைநோக்கு அடிப்படையில் பார்த்தால் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தொடர்ந்து அபரிமிதமான உயர்வு இருக்கும். இந்த மாத இறுதிக்குள் ஒரு பவுன் தங்கம் ரூ.45 ஆயிரத்தை கடந்துவிட வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து தங்கம் விலை ஏறுமுகத்திலேயே இருக்கும். படிப்படியாக அதிகரித்து ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை நெருங்குவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. தற்போதைய சூழலில் தங்கம்-வெள்ளி விலை ஏற்றத்தில் தான் இருக்கும். பெரிய அளவில் இறங்குமுகத்தில் இருக்காது.

கொடுங்கையூர் எம்.ஆர்.நகரை சேர்ந்த முருகன்:- கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு எனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தேன். ஆனால் தற்போது தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் செல்வதை பார்த்தால் பெண் பிள்ளைகளுக்கு சீதனமாக இனி தங்க நகைகளை வழங்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படியே ஒரு வேளை கடனை வாங்கியாவது தங்க நகைகளை சீதனமாக வழங்கினால், அதை அணிந்து கொண்டு பாதுகாப்பாக வெளியே சென்றுவர முடியுமா? என்பதையும் யோசித்து பார்க்க வேண்டிய நிலை உள்ளது.

எனவே திருமணத்தின் போது பெண் பிள்ளைகளுக்கு சம்பிரதாயத்துக்கு சில பவுன் நகைகளை மட்டும் வழங்கி விட்டு மீதம் நகை வாங்குவதற்கான பணத்தில் தங்கள் வசதிக்கு ஏற்ப நிலம் அல்லது வீடு வாங்கி வழங்கி விடலாம். இதனை அனைவரும் கடைப்பிடித்தால் தங்கத்தின் மீதான மோகம் நிச்சயம் குறையும்.

மகளுக்கு சீதன நகை

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த இல்லத்தரசி கஜலட்சுமி:- தங்கம் விலை ஒவ்வொரு ஆண்டும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இது நடுத்தர மக்களை கவலையில் ஆழ்த்தும் செய்தியாக இருக்கிறது. சம்பாதிக்கும் பணத்தில் குடும்பத்தை நடத்தவே பல குடும்பங்கள் தடுமாறும் நிலை உள்ளது. அவர்களுக்கு தங்க ஆபரணங்கள் எட்டாக்கனி போன்று ஆகிவிட்டது.

எனக்கு 10-ம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கிறாள். அவளுக்கு திருமணம் செய்து வைக்கும் போது எனது பெற்றோர் எனக்கு சீதனமாக வழங்கிய நகைகளைதான் வழங்க திட்டமிட்டுள்ளேன்.தங்கம் விலை இன்னும் எவ்வளவு ஆயிரம் உயரப்போகிறதோ? என்பதை நினைக்கும் போது மனதுக்குள் ஒருவித கவலையும், அச்சமும் ஏற்படுகிறது.

சென்னை மூலக்கடையை சேர்ந்த இல்லத்தரசி ஜெகதீஸ்வரி:-

எங்கள் குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு தொடர்ச்சியாக ஏற்பாடு செய்துள்ளோம். இதற்காக இவ்வளவு பவுன் நகைகள் வாங்க வேண்டும் என்று 'பட்ஜெட்' போட்டு வைத்திருந்தோம். ஆனால் மத்திய பட்ஜெட்டின் தாக்கம் நாங்கள் போட்டு வைத்திருந்த திருமண 'பட்ஜெட்'டை பதம் பார்த்து விட்டது. தங்கம் விலை அதிரடியாக உயர்ந்திருப்பதால் நகைக்கு நிர்ணயித்த தொகையைவிட கூடுதலாக செலவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.

'கல்யாணம் செய்து பார். வீட்டைக் கட்டிப் பார்' என்று சொல்வார்கள். அதன் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது. உணர முடிகிறது. ஒவ்வொரு திசையிலும் செலவு கூடிக்கொண்டே செல்கிறது. தங்கம் விலை இவ்வாறு தொடர்ந்து ஏறிக்கொண்டே போனால் நிச்சயம் அதன் மீதான ஈர்ப்பு குறைந்து விடும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com