அ.தி.மு.க பொதுச்செயலாளர் என சசிகலா தொடர்ந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் - டி.டி.வி.தினகரன்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என சசிகலா தொடர்ந்த வழக்கில் கோர்ட்டில் நல்ல தீர்ப்பு வரும் என்று நம்புவதாக டி.டி.வி.தினகரன் கூறினார்.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் என சசிகலா தொடர்ந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் - டி.டி.வி.தினகரன்
Published on

நலத்திட்ட உதவிகள்

தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் அ.ம.மு.க. சார்பில் அமைக்கப்பட்ட கோடை கால தண்ணீர் பந்தலை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் திறந்து வைத்து நீர்மோர், தர்ப்பூசணி பழங்களை வழங்கினார். பின்னர் அவர் கட்சி கொடியை ஏற்றி வைத்து பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இதில் அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி, மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன், மாரியம்மன் கோவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனசேகர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பேட்டி

பின்னர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். இந்த விலையேற்றம் காரணமாக பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும். எனவே உடனடியாக மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

தேர்தல் வாக்குறுதிகளுக்கு எதிராக...

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் கொடுத்த தேர்தல் வாக்குறுதிக்கு எதிராக செயல்படுகிறார். அவர் கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். முந்தைய ஆட்சியாளர்களை குறை கூறிக்கொண்டு இருப்பதனால் எந்த பயனும் இல்லை. நீட் தேர்வு, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு அனுமதி கொடுத்தது தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போது தான். ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த சமயத்தில் மக்கள் நலன் கருதி அந்த திட்டங்களை தடுத்து நிறுத்தினார்.

உலகம் முழுவதும் ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ளது. இந்தியாவில் அந்தந்த பகுதிகளில் வாழும் மக்கள் அவர்களது மொழியில் பேசுகின்றனர். இந்தியாவில் ஆங்கிலத்திற்கு மாற்றாக தான் இந்தி மொழி என மத்திய மந்திரி அமித்ஷா கூறியதாக நான் படித்தேன். மற்றபடி ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தி மொழி என அவர் கூறியதாக எனக்கு தெரியவில்லை.

நல்ல தீர்ப்பு வரும்

சசிகலா பொதுச்செயலாளர் விவகாரம் குறித்து வருகிற 11-ந் தேதி கோர்ட்டில் தீர்ப்பு வர உள்ளது. நல்ல தீர்ப்பாக வரும் என நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com