

சென்னை,
கோடைகாலத்தில் குளிர்ச்சியான பீர் வகைகளுக்கான தேவை அதிகரிக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் உள்ள 4,048 டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளிலும் குளிர்பதனப் பெட் டிகளைப் பொருத்த டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற் கான ஒப்பந்தப்புள்ளிகள் விரைவில் கோரப்பட உள்ளன.
ஒவ்வொரு கடைக்கும் எத்தனை குளிர்பதனப் பெட்டிகள் வழங்கப்பட வேண்டும் மற்றும் அவற்றின் கொள்ளளவு என்ன என்பது அந்தந்தக் கடைகளின் சராசரி தினசரி விற்பனையின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட உள்ளது. இதன்படி, நாளொன்றுக்கு ரூ.10 லட்சம் மற்றும் அதற்கு மேல் விற்பனையாகும் கடைகள் ஏ பிரிவாகவும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10லட்சம் வரை விற்பனையாகும் கடைகள் பி பிரிவாகவும், ரூ.5 லட்சம் வரை விற்பனையாகும் கடைகள் சி பிரிவாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஒவ்வொரு கடையையும் ஆய்வு செய்து, அவற்றின் தேவைகள் குறித்த விரிவான அறிக்கையை அனுப்புமாறு மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வுப்பணிகள் நிறைவடைந்து இறுதித் தேவை கணக்கிடப்பட்டவுடன், குளிர்பதனப் பெட்டிகள் கொள்முதல் செய்யும் பணி தொடங்கும் என டாஸ்மாக் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பீரை குளிரூட்டி விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொள்ளும் இரண்டாவது முயற்சி இதுவாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு நகர்ப்புறங்களில் உள்ள சுமார் 2,000 கடைகளுக்கு 400 லிட்டர் மற்றும் 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட குளிர்பதனப் பெட்டிகள் வழங்கப்பட்டன. ஆனால், அவற்றில் பெரும் பாலானவை தற்போது முறையாகச் செயல்படாததால், படிப்படியாக அவற்றை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறினார்.