

ஊத்துக்கோட்டை,
சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதி நீர், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை வந்தடைந்தது.
சென்னை மாநகரின் குடிநீர் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், தெலுங்கு-கங்கை திட்ட ஒப்பந்தப்படி ஆந்திர அரசு ஆண்டுதோறும் தமிழகத்திற்கு 12 டிஎம்சி தண்ணீரை வழங்கி வருகிறது. அந்த வகையில், நடப்பு ஆண்டிற்கான குடிநீர் தேவைக்காக ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதி நீர், சுமார் 152 கிலோ மீட்டர் தூரம் பயணித்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை பகுதியை வந்தடைந்துள்ளது. எதிர்பார்த்ததை விட இரண்டு நாட்களுக்கு முன்பே இந்த நீர் தமிழக எல்லைக்கு வரும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், சற்று தாமதமாக தற்போது வந்து சேர்ந்து உள்ளது.
தற்போது தமிழ்நாடு எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டுக்கு வினாடிக்கு 43 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. தமிழக எல்லையை வந்தடைந்துள்ள இந்த கிருஷ்ணா நதி நீர், இன்று இரவுக்குள் பூண்டி ஏரியைச் சென்றடையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பூண்டி ஏரிக்கு வரும் இந்த நீர் அங்கு தேக்கி வைக்கப்பட்டு, பின்னர் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படும்.